×

ஆன்லைனில் தேங்காய் ஆர்டர் செய்த வியாபாரியிடம் ரூ.1.35 கோடி மோசடி

 

புதுச்சேரி, ஜன. 29: புதுச்சேரியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ஆன்லைனில் கொப்பரை தேங்காய் வாங்க ரூ.1.35 கோடியை செலுத்தி ஏமாந்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு மொத்தமாக கொப்பரை தேங்காய்களை தமிழகம் முழுவதும் இருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதுபோல், துபாயில் இருக்கின்ற ஒரு நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய கொப்பரை தேங்காய்களை வாங்கி அனுப்ப ஆர்டர் கிடைத்தது.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர் கதிரவன் உடனடியாக நிறைய கொப்பரை தேங்காய் வாங்க வேண்டும் என்பதால் இணைய வழியில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்யும் நிறுவனங்களை தேடியுள்ளார். அப்போது, ஒரு நபரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் பெரிய அளவில் கொப்பரை தேங்காய் வியாபாரம் செய்வதாகவும், உங்களுக்கு எவ்வளவு கொப்பரை தேங்காய் வேணுமோ அதற்கு ஏற்ப முன்பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த நபர் கூறியதை நம்பி கடந்த நான்கு மாதங்களில் ரூ.1.35 கோடி பணத்தை அவர் கூறிய பல வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 26 நாட்களில் மட்டும் புதுச்சேரியை சேர்ந்த 582 நபர்கள் இணைய வழி மோசடியில் சிக்கி ரூ.8 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். பொதுமக்கள் இணைய வழியில் பணத்தை செலுத்தும்போது அந்த நிறுவனம் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி இணைய வழி காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

The post ஆன்லைனில் தேங்காய் ஆர்டர் செய்த வியாபாரியிடம் ரூ.1.35 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rettiarpalayam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...