×

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது

 

கள்ளக்குறிச்சி, ஜன. 29: கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜசேகர் மகன் யுவராஜ் (29). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நெட்ஒர்க் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இந்நிலையில் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் கோபி (34), அதே ஊரை சேர்ந்த சேகர் மகன் ஆகாஷ் (22), தனுஷ் ஆகிய 3 பேரும் தனது பைக்கை திருடி சென்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் மறைத்து வைத்துள்ளதாக தெரியவருகிறது என யுவராஜ் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார், கோபி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அடுத்த அம்மன் நகர் பகுதியில் எஸ்ஐ சத்தியசீலன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த கோபி மற்றும் ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட யுவராஜின் பைக்கை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கோபி, ஆகாஷ் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள தனுஷை தேடி வருகின்றனர். திருடிய பைக்கின் மதிப்பு ரூ.1.25 லட்சம் ஆகும்.  திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் அய்யனார் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளர் மதன் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தேனூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சூர்யா (19), சென்னை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் 2 பேரும் திருக்கோவிலூர் அடுத்த வடியங்குப்பம், கோளப்பாறை பகுதியில் 2 பைக்குகளை திருடி விற்பனைக்காக சென்னைக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

The post கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi, Tirukovilur ,Kalakurichi ,Yuvraj ,Rajasekhar ,Kallakurichi ,Kallakurichi, Thirukovilur ,
× RELATED கள்ளக்குறிச்சியில் மெத்தனாலை மறைத்து வைத்து விற்றது அம்பலம்