×

டிரான்ஸ்பார்மர் மீது ஏறி வாலிபர் குத்தாட்டம்: வைரலாகும் வீடியோ

 

குன்றத்தூர்,ஜன.29: குன்றத்தூரில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞரின் இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரம் கோயில் உள்ளது. அந்த கோயில் அருகிலேயே குன்றத்துார் மின் வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான அதிக மின் திறன் கொண்ட உயரழுத்த டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் டிரான்ஸ்பார்மர் மீது கடகடவென ஏறி உயிருக்கு ஆபத்தா நிலையில் நின்று கொண்டு திடீரென செல்லாத்தா, செல்ல மாரியாத்தா, என் சிந்தையில் வந்து என்ன பலன் என்று சொல்லாத்தா என்ற சாமி பாடலை உற்சாகமாக பாடிய படி மேடையில் நடனம் ஆடுவது போன்று பாட்டு பாடி நடனம் ஆட தொடங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் இளைஞரின் முட்டாள்தனமான செயலைக் கண்டு பரிதாபமாக பார்த்துச் சென்றனர்.

மேலும், சிலர் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துச் சென்று அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனிடையே, அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. டிரான்ஸ்பார்மர் மீது உயிருக்கு ஆபத்தானநிலையில் இளைஞர் மது போதையில் ஏறி நடனம் ஆடினாரா? அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா?

அல்லது மனநோயாளியா? என்ற கேள்வியும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நடனமாடிய போது மின்சாரம் இருந்ததா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் அந்த இளைஞர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதனால் இவ்வாறு நடந்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரின் இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டிரான்ஸ்பார்மர் மீது ஏறி வாலிபர் குத்தாட்டம்: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Thirunageswaram ,Kunradhur ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை