×

ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடுக்கு ஆபத்து: யுஜிசி அறிவிப்பால் பரபரப்பு திரும்பப் பெற கல்வியாளர்கள், கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுக்கு ஆபத்து விளைவிக்கும் யுஜிசி வரைவு விதிகளை திரும்ப பெற வேண்டும் என கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் என உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் குரூப் ஏ, பி, சி, டி பிரிவு பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. அவ்வாறு நிரப்பப்படும் காலி இடங்களுக்கான இடஒதுக்கீடுகளை நீக்குவதற்கான விதிமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) கடந்த டிசம்பர் 27ம் தேதி வெளியிட்டது. இந்த விதிமுறைகள் மீதான கருத்துகளை தெரிவிக்க நேற்றுடன் (28ம் தேதி) கடைசி நாள் என்று யு.ஜி.சி. ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, நேற்றுடன் இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் முடிந்தது.

அந்த வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் நேரடி ஆட்சேர்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பொதுவான தடை இருப்பதாகவும், குரூப் ஏ பதவியில் இருக்கும் காலியிடத்தை பொது நலன் கருதி காலியாக இருக்க அனுமதிக்க முடியாது என்றும், காலிப் பணியிடங்களில் பற்றாக்குறை மற்றும் பின்னடைவு குறித்தும் வரைவு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலி பணியிடங்களுக்கு எதிராக பதவி உயர்வுக்கு தகுதியாக எஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றால், அந்த இடஒதுக்கீட்டை நீக்கவும் இந்த வரைவு வழிகாட்டுதல்கள் அனுமதிக்கிறது. இந்த காலி இடங்களின் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக்குழு, ஒன்றியகல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யு.ஜி.சி.யின் இந்த வரைவு வழிகாட்டுதல்களுக்கான பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டால், அனைத்து ஒன்றியபல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஒன்றிய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் மானியம் பெறும் நிறுவனங்களுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக்குழுவின் இந்த அறிவிப்பு குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமுறை தலைமுறையாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட சமூகம் கல்வியில் பின்தங்கியே இருக்கின்றனர் என்பதை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுள்ளது. அந்த மக்கள் மீண்டு வர அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அறிவுறுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை இதுதான்.

உயர்கல்வி நிறுவனத்தால் இட ஒதுக்கீடு பிரிவில் பொருத்தமான நபர்களை அடையாளம் காணமுடியவில்லை என்றாலோ அல்லது ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த யாரும் குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றாலோ அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதில் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தோல்வியைக் காட்டுகிறது. அவர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான சிறந்த வாய்ப்புகளை அரசு மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, வரைவு வழிகாட்டுதல்கள், இட ஒதுக்கீட்டுக்கான பதவிகள் நீக்கம் செய்யப்படும் என்றும் அந்த இடங்களில் வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் கூறுவது சிக்கலை மேலும் ஏற்படுத்தும். இந்த வழிகாட்டுதல்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு நோக்கத்துக்கு எதிராக உள்ளது. அதனால், பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பிரிவுகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் முன் மேற்கண்ட வரைவு வழிகாட்டுதல்களை வைக்க வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை. அதற்கு மாறாக, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது மிகப்பெரிய சமூக அநீதி. எனவே, இந்த சிக்கலில் ஒன்றிய அரசு தலையிட்டு, யுஜிசி விதிகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும். ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்.

* ஒன்றிய அரசு பணிந்தது

யுஜிசியின் வரைவு வழிகாட்டுதலுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு பணிந்து நேற்று மாலை ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் டிவிட்டர் பதிவில், ‘ஒன்றிய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிட இடஒதுக்கீடு சட்டம் 2019ன்படி, அனைத்து ஒன்றியகல்வி நிறுவனங்களிலும் நேரடி ஆசிரியர் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை நீக்க முடியாது. 2019 சட்டத்தின்படியே கண்டிப்பாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென அனைத்து ஒன்றிய கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதே போல, யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஒன்றியகல்வி நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை, இனியும் ரத்து செய்யப்படாது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு உள்ள பதவிகளுக்கு ஒருங்கிணைந்த தொடர் முயற்சிகள் மூலம் காலிபணியிடங்கள் நிரப்பப்படுவது உறுதி செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.

The post ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடுக்கு ஆபத்து: யுஜிசி அறிவிப்பால் பரபரப்பு திரும்பப் பெற கல்வியாளர்கள், கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Higher ,UGC ,CHENNAI ,Union government ,Union ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...