×

வலைகளை வெட்டி கடலில் வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு இலங்கை கடற்படை அட்டகாசம்

 

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தமிழக படகுகளை வழிமறித்து மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், 5 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசிய இலங்கை கடற்படையினர், படகுகளை விரட்டிச் சென்றுள்ளனர். கடற்படையினரின் நடவடிக்கைகளை தொடர்ந்து, மீனவர்கள் உடனடியாக வேறு பகுதியை நோக்கி புறப்பட்டனர். இதற்காக தங்கச்சிமடம் பகுதி மீனவர் வியாகுலம் என்பவரின் படகில் இருந்து, கடலில் வீசியிருந்த வலையை அவசர அவசரமாக விஞ்ச் மூலம் இழுத்தனர். அப்போது மீனவர் ஜான்ரோடிக் (22) என்பவரது வலது கால் விஞ்ச் கயிற்றில் சிக்கியது. கயிறு விரைவாக இழுக்கப்பட்டதால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் கரையோரப் பகுதிக்குச் சென்று மீன்பிடித்து நேற்று அதிகாலை குறைவான மீன்பாடுடன் கரைதிரும்பினர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மீனவர் ஜான்ரோடிக், சக மீனவர்களால் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக லட்சத்தீவு அருகே கடலில் படகுடன் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

The post வலைகளை வெட்டி கடலில் வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு இலங்கை கடற்படை அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,Ramanathapuram district ,Pak Strait ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை