×

‘இதயம் காப்போம்’ திட்டம் மூலம் இதுவரை 5,531 பேர் பயன்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்ட ‘இதயம் காப்போம்’ திட்டம் மூலம் இது வரை 5,531 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். அன்றைய காலகட்டத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட மாரடைப்பு, இப்போது 20 வயது இளைஞனையே தாக்குகிறது. அதற்கு காரணம் உணவு பழக்கவழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சீரான உடற்பயிற்சி இல்லாதது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகளவில் 17.9 மில்லியனுக்கு மேற்பட்ட நபர்கள் இதயநோயால் இறக்கின்றனர். அதில், ஐந்தில் ஒரு பங்கு நோயாளிகள் இறப்பதும், அதே நோயுடன் போராடிக் கொண்டிருப்பதும் இந்தியாவில்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பின்பு மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இளைஞா்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறாா்கள். இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ‘ இதயம் காப்போம் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதய பாதிப்புகளைச் சரிசெய்ய 14 மாத்திரைகள் கொண்ட ‘இதயம் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால், கிராமங்களில் யாருக்காவது சிறிய அளவிலான இதய பாதிப்பு அல்லது மாரடைப்பு அறிகுறி ஏற்பட்டால், அங்குள்ள துணை சுகாதார நிலையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் சென்று, செவிலியரை அணுக வேண்டும். செவிலியர் இதயச் சிறப்பு மருத்துவா்களை தொடா்பு கொண்டு தேவையான சிகிச்சைகளை வழங்கிடத் தொடங்குவார்். முதல்கட்டமாக, செவிலியரிடம் தரப்பட்டுள்ள 14 மாத்திரைகளை உட்கொள்ளச் செய்வதன் மூலம் உடனடியாக உயிரைக் காப்பாற்றிட முடியும். கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் கடந்த வார நிலவரப்படி, அறிகுறிகள்/சந்தேகத்திற்கிடமான மாரடைப்பு பாதிப்புகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்த 5,145 பேர் பயன்பெற்று உள்ளனர். துணை சுகாதார நிலையங்களில் 386 பேர் பயன்பெற்று உள்ளனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், மாரடைப்பு அறிகுறி உள்ள நோயாளி ஒரு மணி நேரத்திற்குள் இந்த அனைத்து மாத்திரைகளையும் உட்கொள்வது மூலம் மாரடைப்பை கட்டுப்படுத்த முடியும். மாத்திரை வழங்கிய பிறகு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இது கிராமப்புற மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஓராண்டு முடிந்த உடன் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய இருக்கிறோம் என்றார்.

 

The post ‘இதயம் காப்போம்’ திட்டம் மூலம் இதுவரை 5,531 பேர் பயன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...