×

வன்மம் கலந்த நோக்கத்துடன் காந்தியை ஆளுநர் ரவி இழிவுபடுத்தியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

* காந்தி நினைவு தினத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தல்

சென்னை: வன்மம் கலந்த நோக்கத்துடன் காந்தியை பற்றி ஆளுநர் பேசியுள்ளார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காந்தி நினைவு தினத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 30 அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள். ஒற்றை மதவாத தேசியவாதத்தை காந்தி ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. ‘காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான். காந்தியின் கொள்கைகளை மட்டுமல்ல, அவரையே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாத சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் கொல்லப்பட்ட ஜன.30ம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. எனவே, ஜன.30ம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதனைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜன.30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம். வாழ்க அண்ணல் காந்தியின் புகழ். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* அன்பே வாழ்க்கையில் அறநெறி

எடுக்க வேண்டிய உறுதிமொழி பற்றி முதல்வர் தெரிவித்துள்ளதாவது: அன்பை வாழ்க்கை அறநெறியாக் கொண்டும் – மனித நேயத்தை நடைமுறை வழியாகக் கொண்டும் வாழ்வேன். அனைத்து உயிரும் ஒன்றென்று நினைத்து, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வேன். மதவெறியை விலக்கி மதநல்லிணக்கம் பேணுவேன். மக்கள் ஒற்றுமையே மானுடத்தின் வளமும் நலமும் என்பதை மனதில் வைத்தே எந்நாளும் உழைப்பேன். மக்களைப் பிளவுபடுத்தும் ஜாதி, மத எண்ணங்களை விலக்கி அனைத்து மக்களையும் ஒன்றென நினைத்து அரவணைத்துச் செல்வேன். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியச் சமூகத்தில் வேற்றுமையை விதைக்கும் அனைத்து நச்சுக்கருத்துகளையும் அணுவளவும் ஏற்க மாட்டேன். அனைத்துயிரும் ஒன்றென நினைத்து மனித நேயத்தையே நடைமுறை வழிமுறையாகக் கொண்டு வாழ்வேன். அனைவரிடமும் நல்லிணக்கம் பேணுவேன் மானுடம் போற்றுவேன்.

* மதநல்லிணக்க முழக்கம்

உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் முழங்கங்களை எழுப்ப வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மனித நேயம் காப்போம், மதவெறியை விலக்குவோம், வேற்றுமையில் ஒற்றுமை காப்போம், பிளவுகளை விலக்குவோம் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை முழங்கவும் பணித்துள்ளார்.

The post வன்மம் கலந்த நோக்கத்துடன் காந்தியை ஆளுநர் ரவி இழிவுபடுத்தியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Gandhi ,Chief Minister ,MK Stalin ,Gandhi Memorial Day ,Chennai ,M. K. Stalin ,M.K.Stal ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து