×

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் திருப்தி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவுடன், காங்கிரஸ் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு ேபச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். அதில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பது, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசித்தனர். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து முகுல் வாஸ்னிக், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர். அவர்களை வாசல் வரை வந்து திமுகவினர் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு, குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:

திமுகவோடு டெல்லியில் இருந்து வந்துள்ள எங்களுடைய தலைவர்கள் தேர்தல் குறித்து கலந்துரையாடினர். முகுல்வாஸ்னிக் திமுகவுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். அவர்களுக்குள் நெருங்கிய உறவும், பண்பாடும் உண்டு. அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது. மேற்கொண்டு பேச வேண்டிய விஷயங்களை வெகுவிரைவில் பேசுவோம். எத்தனை இடங்கள் கேட்டோம் என்பது எங்களுக்கும் (காங்கிரஸ்), திமுகவுக்கும் இடையேயான பேச்சு. அதை வெளியில் கூறுவதில்லை என்று இரு கட்சிகளும் முடிவுக்கு வந்துள்ளோம். 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது?. எவ்வாறு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது, எந்தவிதமான தேர்தல் பரபரப்புரையை செய்வது, பாஜகவை, அதிமுகவை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளை எவ்வாறு மகிழ்ச்சியில் வைத்து கொள்வது என்பதை பற்றி எல்லாம் பேசினோம். திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முகுல் வாஸ்னிக் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து விவாதித்தோம். திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என்றார். கடந்த தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. அதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது? டி.ஆர்.பாலு தகவல்

திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு அளித்த பேட்டி: திமுக-காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவும் இல்லை. திமுக கேட்கவும் இல்லை. எதையும் திட்டமிடவில்லை. எல்லா கட்சியும் தேர்தலில் அதிக இடங்களில் நிற்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். 40 தொகுதிகளிலும் திமுக நிற்க வேண்டும் என்று தான் நான் விரும்புவேன். கடந்த முறையை விட அதிக இடங்களில் திமுக நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன். எல்லா கட்சி தலைமையும் அதை தான் விரும்பும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னதில் எந்த தப்பும் இல்லை. கொடுக்க வேண்டும். தலைவரிடம் நானும் இதை சொல்லுவேன். புதிய கட்சிகள் என்னைக்கு வேண்டுமென்றாலும் வரலாம். எங்களிடம் இடம் கேட்காமல் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் நீதி மய்யம் வர உள்ளதாக எனக்கு எதுவும் தெரியவில்லை. வருகிற 9ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டம் நடக்கிறது. அதன் பிறகு, 10, 11, 12க்குள் காங்கிரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும். இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியதால் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை. இந்தியா கூட்டணியின் வளர்ச்சிக்காக நிதிஷ்குமார் கூறிய திட்டங்கள் எதுவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்ற ஒன்றை மட்டுமே நிதிஷ் குமார் முன்னிறுத்தினார். நிதிஷ்குமார் பல தடைகள் ஏற்படுத்தியும் கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருந்தோம். பிரதமர் வேட்பாளராக வர வேண்டும் என நிதிஷ்குமார் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் குமார் பிரச்னைதான். இவ்வாறு அவர் கூறினார்.

* காங்கிரஸ் மறுப்பு

தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்ட அறிக்கை: ‘‘2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் திருப்தி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,CHENNAI ,Congress ,Anna University ,KS Alagiri ,Dinakaran ,
× RELATED பொதுமக்களுக்கு உதவும் வகையில்...