×

‘கூகுள் மேப்’ காட்டிய திசையில் சென்று படிக்கட்டில் காரை ஓட்டிய டிரைவர்

கூடலூர்: தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து திரும்பி செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமாக சுற்றுலா வாகனங்கள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு சென்றன. மாலை நேரத்தில் கூடலூர் வழியாக சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. இதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற காரில் வந்த பயணிகள் வாகன நெரிசலை தவிர்த்து வேகமாக செல்ல ‘கூகுள் மேப்’ மூலமாக மாற்றுப்பாதையை தேர்வு செய்தனர்.

அதன்படி புறப்பட்ட அவர்களின் கார் கூடலூர் அருகில் தலைமை தபால் நிலையம் பகுதியில் வந்தது. அப்போது தபால் நிலையம் வழியாக பிரதான சாலையை விட்டு விலகி ஓவேலி சாலைக்கு செல்லும் கிளைச்சாலையில் காரை இயக்கினர். சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்து மீண்டும் வலதுபக்கமாக பிரதான சாலைக்கு செல்லும் குறுக்கு பாதைக்கு ‘கூகுள் மேப்’ காட்டியபடி, வாகனத்தை திருப்பி உள்ளனர். இந்த பாதை ஹெல்த் கேம்ப் பகுதியில் இருந்து குமரன் டியூஷன் சென்டர் பகுதியில் ஊட்டி-கூடலூர் சாலையுடன் இணையும் படிகளுடன் கூடிய நடைபாதை ஆகும்.

சுமார் 50 மீட்டர் தூரம் சிமெண்ட் பாதையில் சென்ற கார் திடீரென படிகளில் இறங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனத்தை ஓட்டியவர் சுதாரித்து நிறுத்தினார். வாகனத்தை பின்னால் திருப்பி இயக்கவும், முன்னால் செல்லவும் முடியாத நிலையில் வாகனத்தை அங்கேயே நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அதே படிகள் நிறைந்த நடைபாதை வழியாகவே காரை மெதுவாக இயக்கி பிரதான சாலைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந்த நடைபாதை அதிகம் இறக்கமாக இல்லாமல் படிகள் சற்று தள்ளி தள்ளி இருந்ததால் காரை சாலைக்கு கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. தொடர்ந்து அதில் வந்த பயணிகள் தங்களது பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.

The post ‘கூகுள் மேப்’ காட்டிய திசையில் சென்று படிக்கட்டில் காரை ஓட்டிய டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Ooty ,Thaipusam ,Republic Day ,Gudalur ,Karnataka ,Kerala ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...