×

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உயர்மட்ட குழு; சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை: அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்பு

புதுடெல்லி:‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உயர்மட்ட குழுவினர் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, அரசியல் பிரபலங்கள், அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினர். இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடத்துவது தொடர்பான சாத்திய கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த குழுவானது லோக்சபா, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள், பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் வழங்கும். கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ‘ஜனவரி 15ம் தேதி வரை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்’ என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி ஒட்டுமொத்தமாக 20,972 கருத்துக்கள் பெறப்பட்டன, அவற்றில் 81% ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான யோசனையை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், 46 அரசியல் கட்சிகளிடம் இருந்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்ட நிலையில், இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளும் கமிட்டியால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ஓபி ராவத், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.ரோகினி ஆகியோரை சந்தித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. இந்தக் குழுவின் நான்காவது கூட்டம் நேற்று நடைபெற்றது.

குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இந்த விஷயத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் தனது ஆலோசனையைத் தொடர்ந்த ராம்நாத் கோவிந்த், கோவாவின் மகாராஸ்ட்ராடி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் பாண்டுரங் தவாலிகருடன் கலந்துரையாடினார். மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் சுபாஷ், முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உயர்மட்ட குழு; சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை: அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Tags : One Nation ,One Election ,Chief Justice of ,Supreme Court ,New Delhi ,One Country ,election ,India ,Chief Justice ,Dinakaran ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...