×

ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி; யுஜிசி வரைவு விதிகளை திரும்ப பெற வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்புவது குறித்து வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, ஏதேனும் ஒரு பணியிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அப்பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்து கொள்ளலாம்.

அதன் பின்னர் அந்த இடத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றி தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று யு.ஜி.சி அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் பணியிடம் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், அது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக செயற்குழுவே எடுத்துக்கொள்ளலாம். ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் அது குறித்து ஒன்றிய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளில் கூறப்பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக்கழக மானியக்குழு கருத்துகளைக் கேட்டிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து இறுதி விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிடவுள்ளது. அவ்வாறு இறுதி விதிகள் வெளியிடப்பட்டால், மத்திய உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் ஒழிக்கப்பட்டு விட்டதாக பொருள் கொள்ள முடியும். உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும்.

அதற்கு மாறாக, தகுதியானவர்கள் இல்லை என்று அறிவித்து இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகிவிடும். எனவே, இந்த சிக்கலில் ஒன்றிய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும். அத்துடன், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி; யுஜிசி வரைவு விதிகளை திரும்ப பெற வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EU ,UGC ,Pa. M. ,Ramadas ,Chennai ,Palamaka ,I. I. ,University Grants Committee ,Central Universities ,Pa. M. K. ,Ramdas ,Dinakaran ,
× RELATED அரசுப்பணிகளில் சேருபவர்களின்...