×

2வது இன்னிங்சில் போராடுகிறது இங்கிலாந்து: ஆலிவர் போப் அபார சதம்

ஐதராபாத்: இந்திய அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்து போராடி வருகிறது. ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 70 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3ம் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

ஜெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86, ஜடேஜா 87, அக்சர் 44, ஸ்ரீகர் பரத் 41, ஷ்ரேயாஸ் 35, ரோகித் 24, கில் 23 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோ ரூட் 4, ஹார்ட்லி, ரெஹான் அகமது தலா 2, ஜாக் லீச் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து 190 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கிராவ்லி 31, டக்கெட் 47 ரன் எடுக்க.., ரூட் 2, பேர்ஸ்டோ 10, ஸ்டோக்ஸ் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து 163 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஓல்லி போப் – பென் ஃபோக்ஸ் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தனர். அபாரமாக விளையாடிய போப் சதம் விளாசி அசத்தினார். ஃபோக்ஸ் 34 ரன் எடுத்து அக்சர் சுழலில் கிளீன் போல்டானார். 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்துள்ளது.போப் 148 ரன் (208 பந்து, 17 பவுண்டரி), ரெஹான் அகமது 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா, அஷ்வின் தலா 2, அக்சர், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, 126 ரன் முன்னிலையுடன் இங்கிலாந்து இன்று 4ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post 2வது இன்னிங்சில் போராடுகிறது இங்கிலாந்து: ஆலிவர் போப் அபார சதம் appeared first on Dinakaran.

Tags : England ,Oliver Pope ,Hyderabad ,Indian ,Rajiv Gandhi International Stadium ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை