×

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

 

செங்கல்பட்டு, ஜன.28: செங்கல்பட்டில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி மாவட்ட தலைவர் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த போராட்டத்தில், இடைநிலை ஆசிரியருக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க மூன்று நபர் குழு மூலம் தீர்வு காணுதல், எண்ணும் எழுத்தும் ஆன்லைன் பதிவேற்றம் இல்லை, எஸ்.எம்.எஸ் கூட்டம் ஆண்டிற்கு நான்கு முறை மட்டும், உயர்கல்வி பின்னேற்பு அனுமதி, உதவி பெறும் பள்ளிகள் என்ட்ரி பே மட்டுமே பெற்று வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குதல், பி.எட். முடித்தவுடன் வழங்கப்படும் ஊதிய உயர்வுக்கான தணிக்கை தடை நீக்கம், 58 மாவட்ட கல்வி அலுவலகங்களின் பள்ளித்துணை ஆய்வர் பதவி,

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஆசிரியர்களை கருத்தாளர்களாக அனுப்புதல் முற்றிலும் நிறுத்தம், 2019 ஜாக்டோ ஜியோ போராட்டம் வழக்கு நிலுவை – குற்றச்சாட்டுகளை ரத்து செய்தல், ரூ.5,400 தர ஊதியம் தணிக்கை தடை நீக்குதல், பதவி உயர்வுக்கு பணி மூப்பு மட்டுமே போதும், டெட் தேவையில்லை என்ற மாநில அரசின் கொள்கை முடிவை நீதிமன்றம் மூலம் நிலைநாட்ட ஆவண செய்தல், இதில் தனிக்கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காணுதல் என 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

The post ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Joint Action Committee of Tamil Nadu Elementary Education Teachers Movements ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...