×

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணி நிறைவு: இஸ்ரோ தகவல்

சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜன.1ம் தேதி கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி- சி58 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோளுடன் இஸ்ரோவில் தனித்துவமான விண்வெளி ஆராய்ச்சி களமான பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 களமும் அனுப்பப்பட்டது. இந்த பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி அதன் பணிகளை முடித்து இலக்குகளை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜன.1ம் தேதி எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட விண்வெளி களமான பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3, தனது பணிகளை முடித்துள்ளது. செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தபட்ட பின் பரிசோதனை தொகுதி களம் 350 கி.மீ. கீழே இறக்கப்பட்டது. இந்த களம் 25 நாளில் 400 முறை சுற்றுப்பாதையில் சுற்றி வந்துள்ளது. இதில் இருந்த 9 கருவிகளும் திட்டமிட்டப்படி செயல்படுத்தபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் தகவல்கள் ஒவ்வொரு சுற்றிலும் சேமிக்கப்பட்டது. தற்போது அனைத்து கருவிகளின் நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டு பரிசோதனை தொகுதி தனது இலக்குகளை எட்டியுள்ளது. பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி 1 முதல் 3 வரை மொத்தம் 21 கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த தொகுதி மேலும் ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் 75 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து இந்த களம் வளிமண்டலத்திற்கு வரும். இதனால் எக்ஸ்போசாட் திட்டத்தின் விண்வெளி குப்பைகள் இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

The post எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணி நிறைவு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,CHENNAI ,Indian Space Research Organization ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...