×

கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் கோயில் கட்டியெல்லாம் தேர்தலில் வெற்றி பெற முடியாது: கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை: மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து கூறியிருப்பதை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து பேசியதாவது: கவர்னர் எந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து பேசுகிறார்?. காந்திக்கும், நேருக்கும், பட்டேலுக்கும் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்ததுண்டு. அதேபோன்று, ஒரே சிறையில் இருந்த வரலாறு கிடையாது. பாஜ தலைவர்கள் யாரும் சுதந்திர வரலாற்றில் பங்கேற்றது இல்லை. வரலாறே இல்லாத கருப்பு கூட்டமாக தான் இருந்தார்கள். துரோக வரலாறு தான் பாஜவுக்கு உண்டு. பாஜ தலைவர்களில் யாராவது ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரண்டு மணி நேரம் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்று சொல்லச் சொல்லுங்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம்.

தியாகத்தில் கூட காந்தியுடன் பாஜவினரால் போட்டியிட முடியாது. அதனால் தான் அவரை சுட்டுக் கொன்றார்கள். கோபுரம் இல்லாத கோயிலுக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி பார்த்திருக்கிறீர்களா? ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அப்படி தான் நடத்தியிருக்கிறார்கள். ராமர் கோயிலை திறப்பதற்கு மோடிக்கு ஒரு தகுதியும் இல்லை. கோயில் கட்டியெல்லாம் வெற்றி பெற முடியாது. நாடு நன்றாக இருக்க பாஜ, ஆர்எஸ்எஸ்ஐ அப்புறப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் வெற்றி பெறுவார். கொள்கைக்காக அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்பிக்கள் விஜய் வசந்த், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டெல்லி பாபு, அடையாறு துரை, ரஞ்சன் குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று த கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

The post கவர்னரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் கோயில் கட்டியெல்லாம் தேர்தலில் வெற்றி பெற முடியாது: கே.எஸ்.அழகிரி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Congress ,KS Azhagiri Awesam ,Chennai ,Panagal Palace ,Saidapet ,Chennai District Congress Committees ,Tamil ,Nadu ,Governor ,RN ,Ravi ,Mahatma Gandhi ,KS Azhagiri Avesam ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...