×

எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்பு கொடி காட்டியதால் கேரள கவர்னர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா: 19 பேர் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்புக்கொடி காட்டியதால் கவர்னர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கேரள பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அனுதாபிகளுக்கு பதவி வழங்குவதாகக் கூறி ஆளுங்கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ, கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று கொல்லம் அருகே நிலமேல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு திரண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ தொண்டர்கள் கருப்புக்கொடி மற்றும் கண்டன பேனர்களுடன் கவர்னரின் கார் முன் பாய்ந்தனர்.

இதையடுத்து காரை உடனடியாக நிறுத்துமாறு கூறிய கவர்னர் கடும் ஆத்திரமடைந்தார். பின்னர் காரிலிருந்து இறங்கி சிறிது நேரம் நடந்து சென்று அங்கு போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த போலீசாரையும் கண்டித்த கவர்னர், சாலை ஓரத்தில் இருந்த ஒரு டீக்கடை முன் நாற்காலி போட்டு அமர்ந்தார். இது குறித்து அறிந்ததும் கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் கவர்னரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடமும் ஆவேசமாக பேசிய கவர்னர் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்திய எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த 19 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னரே இரண்டு மணி நேரம் கழித்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் போராட்டத்தை கைவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* கவர்னருக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு விசித்திரமாக இருக்கிறது: முதல்வர்

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறியது: மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கவர்னருக்கு இப்போது சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. சிஆர்பிஎப் நினைத்தால் கேரளாவை ஆட்சி செய்ய முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.

* இசட் பிளஸ் பாதுகாப்பு

கொல்லம் அருகே தனக்கு எதிராக எஸ்எப்ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் அங்கிருந்தே ஒன்றிய உள்துறை மற்றும் பிரதமர் அலுவலக உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார்.இதை தொடர்ந்து இசட் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு வழங்க ஒன்றிய உள்துறை உத்தரவிட்டது.

The post எஸ்எப்ஐ அமைப்பினர் கருப்பு கொடி காட்டியதால் கேரள கவர்னர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா: 19 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sudden dharna ,Kerala Governor Road ,SFI ,Thiruvananthapuram ,Kerala ,governor ,dharna ,Arif Mohammad Khan ,RSS ,Kerala Governor ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...