×

கம்பிகள், சிமென்ட் இல்லாமல் எகிப்திய கட்டுமானத்தில் ரூ.20 லட்சத்தில் உருவாகும் வீடு: திருச்சி இன்ஜினியர்கள் புது முயற்சி

திருச்சி: உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் மற்றும் சீனப்பெருஞ்சுவர் ஆகியவற்றின் கட்டுமானங்களை கண்டு பலரும் திகைத்து போகின்றனர். அறிவியல் தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்திலேயே துல்லியமாக இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் உறுதி தன்மை இன்றுவரை அசைக்க முடியாத அளவிற்கு இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்தான ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன. இதில் பொதுவான கருத்தாக இருப்பது இவற்றின் கட்டுமான அமைப்பு, கட்டுமான பொருட்களின் தரத்தால் இன்றளவும் பல இயற்கை சீற்றங்கள், போர்களை கடந்து உறுதியாக கம்பீரமாக நிற்கின்றன.

இந்த கம்பீரத்திற்கு காரணம் கட்டுமானத்தில் உள்ள தரமான பொருட்கள் தான். ஒன்று சூரியஔியில் சுடப்பட்ட மண்செங்கல் மற்றும் அதிகபட்சம் 2.5 டன் எடை வரையுள்ள கற்கள். இந்த கற்களை அடுக்கித்தான் பிரமிடுகளை உருவாக்கியுள்ளனர். இந்த கற்களை அடுக்கும்போது இவற்றிக்கிடையே ஏற்படும் இடைவெளிகளை நிரப்ப சுண்ணாம்பு, மணற்கல் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற முறையில் வீடு கட்டினால் என்ற எண்ணம் சிலருக்கு தோன்றிய நிலையில் இவ்வாறான ஒரு வீட்டை என்ஐடி படித்த திருச்சி இன்ஜினியர்கள், திருச்சி -லால்குடி சாலையில் உள்ள தாளக்குடியில் கட்டி வருகின்றனர்.

இதுகுறித்து என்ஐடியில் பி.இ.கட்டிட பொறியியல் துறை படித்த மாணவர்கள் ஆகாஷ், இனியன், பிரவீன் ஆகியோர் கூறியதாவது: திருச்சி -லால்குடி சாலையில் உள்ள தாளக்குடியில் 1550 சதுர அடி இடத்தில், தற்போது 650 சதுர அடியில் ஒரு வீட்டை கட்டி வருகிறோம். தற்போது இந்த வீட்டுக்கான சித்தாள் மற்றும் கொத்தனார் பணிகளை நாங்களே செய்து வருகிறோம். இந்த வீட்டிற்கு செம்மண், கரலை மண், சுண்ணாம்பு, செங்கல் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். செம்மண்ணுடன் கரலை மண்ணை சேர்த்து சுவர்கள் கட்டும்போது அதிகளவு உறுதியாக இருக்கும். இந்த வீட்டு கட்டுமானத்திற்கு கம்பிகள் பயன்படுத்தப்படவில்லை. முதல்மாடிவரை கட்ட முடியும். இந்த வீடு 50 ஆண்டுகளுக்கு அதிகமாக உறுதி தன்மையுடன் இருக்கும் என்று எங்களால் உறுதியாக சொல்ல முடியும். அதேநேரம் ஆண்டுக்கு ஒருமுறை இந்த வீட்டை சரியாக பராமரிப்பு செய்வது அவசியம். இந்த வீட்டிற்கு பெயிண்டிங் செய்யாமல் பழைய முறையில் வெள்ளை நிற சுண்ணாம்பு தான் அடிக்க இருக்கிறோம். இந்த வீட்டில் ஒரு ஹால், கழிவறையுடன் ஒரு படுக்கையறை, ஒரு சமையலறை, வௌிச்சம் உள்ளே வருவதற்கு ஒரு இடம் என்று வடிவமைத்துள்ளோம். இந்த வீட்டிற்கு இதுவரை ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளோம். எந்த அளவிற்கு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு செலவை குறைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கம்பிகள், சிமென்ட் இல்லாமல் எகிப்திய கட்டுமானத்தில் ரூ.20 லட்சத்தில் உருவாகும் வீடு: திருச்சி இன்ஜினியர்கள் புது முயற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy Engineers ,Trichy ,Egypt ,Great Wall of China ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...