×

சேலம், கோவை உள்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை: தேர்தல் வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை அமைத்துள்ளார். அதன்படி தேர்தல் பணிகள் ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு, மேற்பார்வை குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24ம் தேதி நடந்தது.

இதில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது. இதில் கோவை மற்றும் சேலம் தொகுதிக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களிடம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து குழுவினர் ஆலோசனை நடத்தினர். மேலும் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம் குறித்து கேட்டறிந்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெறுவது எப்படி என நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு குழு கேள்வி எழுப்பியது. ஒரு சில திமுக நிர்வாகிகள் அதிமுகவினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக நிர்வாகிகளுக்குள் போட்டிகளை விட்டு விட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே மாநில உரிமைகளை நாம் பெற முடியும். எனவே அதனை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்படுங்கள். வெற்றி நமதாக இருக்க வேண்டும்” என நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் நீலகிரி, திருப்பூர் தொகுதிக்கான திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வருகிற 5ம் தேதி வரை தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்துகிறது.

The post சேலம், கோவை உள்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை: தேர்தல் வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,DMK ,Salem ,Coimbatore ,CHENNAI ,President ,Chief Minister ,M.K.Stalin ,Ministers ,KN Nehru ,AV Velu ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...