×
Saravana Stores

எண்ணூரில் சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்பு திட்ட வரைபடம் வெளியீடு

சென்னை: எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படலம் கலந்தது, அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறக்கூடிய சாம்பல் கலந்தது மற்றும் கோரமண்டல் உர தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது போன்ற பல்வேறு பிரச்னைகளால் எண்ணூர் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனால், இனிவரும் காலத்தில் கொசஸ்தலை ஆற்றில் மாசு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுக்கு எண்ணூர் மக்கள், பாதுகாப்பு குழுவுடன் இணைந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில், மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை அறிக்கையாக தயார் செய்துள்ளது. மேலும் சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை மறு சீரமைப்பு செய்வது குறித்து ஆய்வு செய்து அதனடிப்படையில் திட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த, மறுசீரமைக்கும் மக்கள் திட்டத்தை வெளியிடும் நிகழ்ச்சி எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், எண்ணூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முரளிதரன், கண்ணன், அரி பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்கள் திட்டம் வரைபடத்தை வெளியிட்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கூறுகையில், ‘‘அனல் மின்நிலைய வருகைக்கு பின், நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். பட்டா இல்லாததால் குடிநீர், மின் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு பெற முடியவில்லை. மாசடைந்துள்ள கொசஸ்தலை ஆற்றை மறு சீரமைத்து தரவேண்டும்’’ என்றனர்.
நீதிபதிகள் பேசுகையில், “ஆற்றில் 8 அடி அளவிற்கு சாம்பல் கழிவுகள் உள்ளன.

அலையாத்தி காடுகள் அழிந்து, கொசஸ்தலை ஆற்றை காணவில்லை. இவைகளை மீட்டெடுக்க மக்கள் உறுதியுடன் போராட வேண்டும். பொருள், உயிர், சுற்றுச்சூழல், உயிரினங்கள் பாதிப்பு என நான்கு வகையான பாதிப்புகள் உள்ளன. உத்தரவாதம் அளித்த நிறுவனங்கள் தற்போது கண்டுகொள்ளவே இல்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசு அவர்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும். எண்ணூரில் நடந்தது போல் மற்ற இடங்களில் நடக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்றனர்.

The post எண்ணூரில் சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்பு திட்ட வரைபடம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Ennore ,CHENNAI ,Kosasthalai River ,Coromandel Fertilizer Factory.… ,Dinakaran ,
× RELATED எண்ணூரில் சட்ட விரோதமாக மழைநீர்...