×

பீகார் அரசியலில் அதிரடி திருப்பம் முதல்வர் நிதிஷ்குமார் இன்று ராஜினாமா? காங்., லாலு கட்சி கூட்டணியில் இருந்து விலகுகிறார், பா.ஜ ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க திட்டம்

பாட்னா: பீகார் அரசியலில் அதிரடி திருப்பமாக, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிதிஷ், மீண்டும் பாஜவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனாலும், ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜ தனது கட்சியையே உடைக்க திட்டம் தீட்டுகிறது என குற்றம்சாட்டிய நிதிஷ்குமார் கடந்த 2022ம் ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆர்ஜேடியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். அதுமட்டுமின்றி, வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள வலுவான இந்தியா கூட்டணி அமைய நிதிஷ் அடித்தளமாக செயல்பட்டார். இக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி நிதிஷுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்த நிதிஷ் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்த அவர், ஆர்ஜேடி உடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டு மீண்டும் பாஜவுடன் இணைய முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஏற்றார் போல் நேற்று முன்தினம் குடியரசு தின விழாவையொட்டி பாட்னாவில் ஆளுநர் தந்த தேநீர் விருந்தை துணை முதல்வரான லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்தார். இதே போல, பக்சர் தொகுதியில் புகழ்பெற்ற பாபா பிரமேஸ்வர் நாத் கோயிலை அழகுபடுத்தும் திட்டத்தை நிதிஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

சுற்றுலா துறை சார்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்நிகழ்ச்சியில் அத்துறையின் பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை. அதோடு ஆர்ஜேடி கட்சியினர் யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதற்கு மாறாக, பாஜ மூத்த தலைவரும், பக்சர் தொகுதி எம்பியுமான ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பங்கேற்றார். இந்த சம்பவங்கள் நிதிஷ் குமார் மீண்டும் பாஜவுடன் இணைய இருப்பதை உறுதி செய்த நிலையில், பீகார் அரசியல் களம் நேற்று உச்சகட்ட பரபரப்படைந்தது. மாலையில் பாட்னா திரும்பிய நிதிஷ் குமார் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.

அதே சமயம், லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி இல்லத்தில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் கூடினர். இதில், நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு பாஜ பக்கம் திரும்பும் பட்சத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து ஆர்ஜேடி தலைவர்கள் விரிவான ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதே போல, புர்னியாவில் காங்கிரஸ் முன்னாள் மற்றும் இன்னாள் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ஷாகீல் அகமது கான் தலைமையில் நடந்தது. பாஜவும் தனது கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் அவசர கூட்டத்தை நடத்தியது. இதில், பாஜவின் பீகார் மாநில பொறுப்பாளர் வினோத் தவ்டேவும் பங்கேற்றார்.

முன்னதாக பாஜ மூத்த தலைவர் ராதா மோகன் சிங் நேற்று காலை ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து பேசி உள்ளார். ஆனால், நிதிஷ் உட்பட எந்த கட்சியும் ஆட்சி மாற்றம் குறித்த எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. நிதிஷ் வீட்டில் நேற்று இரவு நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம், இன்று மாலை பாஜவுடன் இணைந்து நிதிஷ் மீண்டும் புதிய ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது. இல்லாவிட்டால் லாலு கட்சியான ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதிஷ் அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் பா.ஜவை சேர்ந்த எம்எல்ஏக்களை அமைச்சர்களாக நியமிக்கும்படி கவர்னருக்கு அவர் பரிந்துரை செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி திருப்பத்தால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது.

* உள்ளே… வெளியே… ஆட்டம்போடும் நிதிஷ்
கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து முதல் முறையாக மெகா கூட்டணி அமைத்து பாஜவை வென்று ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் 2017ல் அக்கூட்டணியில் இருந்து விலகி பாஜவுடன் கைகோர்த்து புதிய ஆட்சி அமைத்தார். அதே போல, 2020ல் பாஜவுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ், 2022ல் பாஜவை கழற்றிவிட்டு ஆர்ஜேடி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார். இப்போது, அக்கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜவுடன் சேர உள்ளார்.

* மனம் மாற மாட்டார்கள்: மல்லிகார்ஜூனா கார்கே
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நிதிஷ் குமார், மம்தா உள்ளிட்ட தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. முதலில் அவர்களிடம் பேசி சரியான விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன். இல்லையெனில் குழப்பத்திற்கே வழிவகுக்கும். நாட்டின் ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் மனம் மாற மாட்டார்கள், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்’’ என்றார். காங். தான் காரணம்: ஐக்கிய ஜனதாதளம் ஆவேசம்

* ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் ஆலோசகரும், செய்தித் தொடர்பாளருமான கே.சி. தியாகி நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா கூட்டணி சரியும் விளிம்பில் உள்ளது. ஏற்கனவே இந்தியா கூட்டணி மேற்கு வங்கம், பஞ்சாப்பைத் தொடர்ந்து பீகாரிலும் கிட்டத்தட்ட உடைந்து விட்டது. எதிர்க்கட்சிகளை ஒரே கூட்டணியில் சேர்க்க வேண்டுமென்ற இலக்கையும், நோக்கத்தையும் கொண்ட நிதிஷ் குமாரை காங்கிரஸ் தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டனர். நிதிஷ் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆனால் காங்கிரசின் மேலிட தலைவர்களில் சிலர் அவரை மீண்டும் மீண்டும் அவமதித்தனர்’’ என்றார்.

* சிராக் பஸ்வான் கவலை அமித்ஷாவுடன் சந்திப்பு
நிதிஷ் குமார் மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைப்பதைத் தொடர்ந்து, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பஸ்வான் பிரிவு) தலைவர் சிராக் பஸ்வான், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களுக்கு கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என கவலை அடைந்துள்ளார். இதனால் அவர் நேற்று அவசர அவசரமாக டெல்லியில் அமித்ஷா மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தனித்தனியாக சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து சிராக் பஸ்வான் கூறுகையில், ‘‘பீகார் அரசியல் நிலவரம் தொடர்பாக எங்கள் கவலைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக அமித்ஷா, நட்டாவை சந்தித்து பேசி உள்ளேன். இதில் சில வாக்குறுதிகள் தந்துள்ளனர்’’ என்றார்.

* மே.வங்க பயணத்தை ஒத்திவைத்த அமித்ஷா
பீகாரில் அரசியல் களேபரங்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்களவை தேர்தல் ஆயத்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணமாக இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்ல இருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பயணத்தை நேற்று ஒத்திவைத்தார். இந்த பயணத்திற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பாஜ தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.

* மூத்த பார்வையாளராக பாகேலை நியமித்த காங்.
பீகாரில் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நடைபயணம் நாளை அம்மாநிலத்தில் நுழைகிறது. எனவே, ராகுல் யாத்திரைக்கான ஏற்பாடுகளை கவனிக்கவும், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் மூத்த பார்வையாளராக சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலை காங்கிரஸ் மேலிடம் நேற்று நியமித்தது.

* இந்தியா கூட்டணி உடையவில்லை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா கூட்டணி உடையவில்லை. எங்கள் கூட்டணியில் சிறு பிளவை ஏற்படுத்த பாஜ தன்னால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஏற்கனவே பேசி, கடிதமும் எழுதி உள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும் அவர் பேச முயற்சித்து வருகிறார். ஆனால் இருவருக்கும் பல்வேறு பணிகள் இருப்பதாக பேசுவதற்கான நேரம் அமையவில்லை. மம்தாவும், நிதிஷும் இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய அங்கமாக இருந்ததால் அவர்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நான் நம்புகிறேன்’’ என்றார்.

The post பீகார் அரசியலில் அதிரடி திருப்பம் முதல்வர் நிதிஷ்குமார் இன்று ராஜினாமா? காங்., லாலு கட்சி கூட்டணியில் இருந்து விலகுகிறார், பா.ஜ ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Bihar ,Lalu ,Pa ,J. Patna ,Ammanili ,Nitish ,Congress ,Rashtriya Janata ,BJP ,Ja ,Dinakaran ,
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...