×

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்க திட்டம்? ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணைய பக்க பதிவால் சர்ச்சை

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்கும் வகையில், 1950ம் ஆண்டுக்கு முன்பிருந்த முகப்பு பக்கத்தை ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் சர்ச்சை கிளம்பி உள்ளது. கடந்த 22ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்து அமைப்பினரும், பாஜகவினரும் இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர். இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் முற்போக்கு அமைப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட நிராகரித்தன. மேலும் ஆளும் பாஜக, ராமர் கோயிலை வழிபாட்டு நிகழ்வாக அல்லாமல் அரசியல் ரீதியாக பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விவகாரத்தில் தீவிரமாக பாஜகவை எதிர்த்து வருகிறது.

பல்வேறு தரப்பினரும் ராமர் கோயில் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள், நிகழ்வுகளை, தங்களது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், முகநூல் பக்கம், எக்ஸ் தள பக்கம், இன்ஸ்டாகிராம் பக்கம் ஆகியவற்றில் பதிவிட்டு வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை தங்களது முகப்பு பக்கங்களில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் கிளை அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை தங்களது முகப்பு பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதே போல் பிரபல திரைக்கலைஞர்களான பார்வதி, ரீமா கல்லீங்கல், திவ்யா பிரபா, இயக்குனர்கள் ஆஷிக் அபு, ஜியோ பேபி, கமல், பாடகர் சூரஜ், சந்தோஷ் உள்ளிட்டோரும் தங்களது சமூக வலைதள முகப்பு பக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் குடியரசு நாளையொட்டி ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பின்னணியில் இடம் பெற்றிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் விடுபட்டிருந்தது. அதில், ‘புதிய இந்தியா தனது அடித்தளக் கொள்கைகளுடன் எதிரொலிக்கிறது. 76வது ஆண்டு குடியரசு தினத்தை (2025) கொண்டாடும் போது, இந்திய அரசியலமைப்பின் அசல் முகப்பு பக்கத்தை மறுபரிசீலனை செய்வோம். இந்தியாவின் வேர்களை ஆராய்ந்து புதிய பயணத்தைத் தொடங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1976ல் எமர்ஜென்சி (நெருக்கடி) கால கட்டத்தில்தான் அரசியல் சாசன முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ ஆகிய இரண்டு வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன.

அவற்றை முகவுரையில் தக்க வைத்துக் கொள்வதா? இல்லை நீக்குவதா? என்பது குறித்து அவ்வப் போது விவாதம் நடத்து வருகிறது. எதிர்காலத்தில், அலுவலகப் பயன்பாட்டிற்காக ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ ஆகிய இரு வார்த்தைகளும் இல்லாத அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய முகவுரையே பயன்படுத்த வேண்டும் என்று ஆளும் பாஜக தலைவர்கள் அவ்வப்போது பேசி வருகின்றனர். மதச்சார்புகளுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் பிரதமர் மோடி அரசு, அரசியல் சாசனத்தின் முகவுரையில் இருந்து ‘மதசார்பற்ற’ என்ற வார்த்தை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் விளம்பரப்படுத்தி இருப்பதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

The post இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் ‘மதசார்பற்ற’, ‘சோஷலிச’ வார்த்தைகளை நீக்க திட்டம்? ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணைய பக்க பதிவால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : EU government ,New Delhi ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...