×

தமிழகத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிற மாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்களின் ஊடுருவலும், குற்றச் செயல்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற தொடர் நிகழ்வுகளால் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் தொடர்ச்சியாக எச்சரித்துக்கொண்டே இருக்கிறேன் என்பதனாலே போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கு `ஆபரேஷன் கஞ்சா’ ஆரம்பித்ததாக சொன்ன தமிழக காவல் துறை போதைப் பொருள் புழக்கம் குறைந்ததாக தெரியவில்லை. பத்திரிகையாளர் ஒருவர், காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாக மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக காவல் துறை அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24 மணி நேரமும் காவல்துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சிறப்பு வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உதவி நாடி காவல் துறையை அணுகும் மக்களிடம், கவனத்துடன் அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து, எந்தவித தாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்கும் பொருட்டு, மேற்கூறிய நடவடிக்கைகளை செயல்படுத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தமிழக மக்களை காக்கும் உன்னத பணியினை மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Police Department ,Tamil Nadu ,Edappadi Palanisamy ,Chennai ,Eadapadi Palanisami ,Secretary General ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...