×

ஜடேஜா நிலையான, தரமான வீரர்: பிரக்யான் ஓஜா பாராட்டு

ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், 175 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. இதற்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், கேஎஸ் பரத், அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார். ஏற்கனவே பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஜடேஜா, பேட்டிங்கிலும் 81 ரன்கள் சேர்த்து இன்று 3வது நாள் ஆட்டத்தில் ஆடுகிறார். கடந்த 4 ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கில் ஜடேஜாவின் எழுச்சி அபாரமாக உள்ளது.
இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஜடேஜா அதிக ரன்களை விளாசியுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லி 9 இன்னிங்ஸ்களில் 378 ரன்களையும், ரோகித் சர்மா 10 இன்னிங்ஸ்களில் 356 ரன்களையும் விளாசியுள்ளனர். ஆனால் ஜடேஜா 9 இன்னிங்ஸ்களில் ஆடி ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 417 ரன்களை விளாசி இருக்கிறார். இதுகுறித்து முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பேசுகையில், “இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணி பக்கத்தில் திரும்பியதற்கு ஜடேஜாவின் பேட்டிங் முக்கிய காரணம். 2019ம் ஆண்டுக்கு பின்னரே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா 40 முதல் 50 ரன்கள் வரை சீராக சேர்த்து வந்தார்.

அதேபோல் சில பெரிய இன்னிங்ஸ்களையும் ஆடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பல நேரங்களில் ஒரு அணியின் 6 விக்கெட்டை வீழ்த்திவிட்டால், அடுத்து வரும் டெய்லண்டர்களை விரைவாக வீழ்த்த நினைப்பார்கள். இதனால் அணியின் முன்னிலையை கட்டுப்படுத்த முடியும் என்று திட்டமிடுவார்கள். ஆனால் 6 விக்கெட்டுகளை இழந்தபோதும், இந்திய அணியின் முன்னிலை 175 ரன்களாக உயர்ந்துள்ளது. சொந்த மண்ணில் ஜடேஜாவை ஒரு நிலையான, தரமான வீரர் என்றே கூறலாம். ஜடேஜாவின் பேட்டிங்கை நம்பர் 3 மற்றும் நம்பர் 4 வரிசையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களோடு தாராளமாக ஒப்பிடலாம் என்றார்.

The post ஜடேஜா நிலையான, தரமான வீரர்: பிரக்யான் ஓஜா பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Jadeja ,Pragyan Oja Praise ,Hyderabad ,England ,Ravindra Jadeja ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்