×

வாஜ்பாய் இல்லாமல் மோடி பிரதமராகி இருக்க முடியாது.. ராமரை வைத்து ஏமாற்றினால் தண்டனை : கே.பி.முனுசாமி தாக்கு

கிருஷ்ணகிரி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயை வாழ்த்தி பேசித்தான் மோடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில்,”அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பாஜகவை பின்னிலைப்படுத்தி பேசுகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் தொண்டர்கள் கடும் கோபத்துக்கு ஆளாவார்கள். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வட மாநிலங்களில் மட்டும்தான் இருந்தது; தென் மாநிலங்களில் கிடையாது. ஜெயலலிதா தான் பாஜகவை தென் மாநிலங்களுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி கூட்டணி வைத்தார். தேசியம் என்ற சொல்லுக்கு ஒரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா.

தேசிய கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் வரலாற்றை பிழையாக கூறக் கூடாது. பாஜகவை தென் மாநிலத்துக்கு அழைத்து வந்து கூட்டணி அமைத்தவர் ஜெயலலிதாதான். தேசிய ஜனநாயக கூட்டணி என்ற கட்டமைப்பை உருவாக்கியவர் ஜெயலலிதாதான். தேசிய ஜனநாயக கூட்டணி தங்கள் வீடு எனப் பேசுகிறார் அண்ணாமலை. தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்போது படிக்கின்ற மாணவராக இருத்திருப்பார் அண்ணாமலை. தமிழ்நாட்டுக்கான உரிமையை தராததால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறினார். தே.ஜ. கூட்டணி நாங்கள் கட்டிக் கொடுத்தது; நாங்கள் உருவாக்கியது என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ளவேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை வாழ்த்தி பேசித்தான் மோடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி அண்ணாமலை பேசுவதே இல்லை. பாஜக உருவாக்கப்பட்ட போது, நரேந்திர மோடி ஒரு தொண்டராகவோ அல்லது மாநில தலைவராகவோ தான் இருந்திருப்பார். பிரதமர் மோடியை மட்டும் முன்னிறுத்தி அண்ணாமலை அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்.

அண்ணாமலை தனது சொந்தக் கட்சி தலைவர்களையே களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் பேச்சைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவினரால் வாஜ்பாய் மறக்கடிக்கப்படுகிறாரா அல்லது மறத்துவிடுகிறார்களா என்பது தெரியவில்லை. ராமர் அனைவருக்குமானவர்; அவரை வைத்து ஏமாற்றினால் அதற்குரிய தண்டனையை ராமரே வழங்குவார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தப் பின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை உணர்வார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வாஜ்பாய் இல்லாமல் மோடி பிரதமராகி இருக்க முடியாது.. ராமரை வைத்து ஏமாற்றினால் தண்டனை : கே.பி.முனுசாமி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Vajpayee ,K. B. Munusamy ,Krishnagiri ,B. Munusamy ,H.E. ,Deputy Secretary-General ,Annamalai ,BJP ,Ram ,K. ,B. Munusami ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…