×

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி செய்து வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”கடந்த 9 ஆண்டாகவே ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்கு பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. பாஜக நிர்வாகிகள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பேசியதற்கான ஆடியோ பதிவுகள் உள்ளன. டெல்லி அரசை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரூ.25 கோடி கொடுப்பதாக 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசியுள்ளது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரிடம் பேசி வருவதாக 7 எம்.எல்.ஏக்களிடம் பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர். அமலாக்கத்துறை மூலம் தம்மை கைது செய்து ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கவும் பாஜக சதி செய்து வருகிறது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கை காரணம் காட்டி தன்னை கைது செய்ய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்வதைவிட ஆட்சியை கவிழ்ப்பதே பாஜகவின் திட்டம் ஆகும்.

பாஜகவினர் தொடர்பு கொண்ட 7 எம்.எல்.ஏக்களும் பேரத்துக்கு பணிய முடியாது என தெரிவித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு 2-வது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை தொடர் சம்மன் அனுப்பி வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

The post ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Kejriwal ,AAP ,AAP M.L. ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்