×

காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் மாடு விடும் திருவிழாவில் இளைஞர்களை பந்தாடிய காளைகள்

*50 பேர் காயம்

கே.வி.குப்பம் : வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. காலை 10 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் விழாக்குழுவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.விழாவில் வேலூர், காட்பாடி, கே.விகுப்பம், லத்தேரி, குடியாத்தம், பேரணாம்பட்டு, பரதராமி, அணைக்கட்டு, ஆந்திரா மாநிலம் சித்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் 2 மாடுகள் தகுதி நீக்கம் செய்யபட்டன.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மாடு விடும் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்தனர். வாடிவாசலில் இருந்து ஒன்றின்பின் ஒன்றாக இளைஞர்கள் மத்தியில் காளைகள் சீறி பாய்ந்து ஓடின. முன்னதாக விழாவை தாசில்தார் ஜெகதீஸ்வரன் கொடியசைத்து துவங்கி வைத்தார். வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டுப்பாடுகளை மீறிய இளைஞர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

ஓடுபாதையில் காளைகள் ஓடி வந்த வேகத்தில் தடுப்புகள் உள்ளே நின்று ஆரவாரம் செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது முட்டியது. இதில் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த 44 பேருக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகள் ஓடிவந்த வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் 4 காளைகளுக்கு லேசான காயமும், ஒரு காளை படுகாயமும் அடைந்தது.குறிப்பிட்ட இலக்கை விரைந்து ஓடிய காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 57 பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக ஓடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

The post காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் மாடு விடும் திருவிழாவில் இளைஞர்களை பந்தாடிய காளைகள் appeared first on Dinakaran.

Tags : cow-shedding festival ,Karasamangalam ,Katpadi ,KV ,Kuppam ,Vellore district ,Vellore ,K.Vikuppam ,Latheri ,Kudiyattam ,
× RELATED ஏரியில் மீன் பிடித்தவர் தவறி விழுந்து...