×

எருதுவிடும் விழாவில் முறைகேடு என போராட்டம் கலெக்டர் அலுவலக கேட்டில் காளைகளை கட்டியவர் கைது

*திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் : எருதுவிடும் விழாவில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்து திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கேட்டில் காளைகளை கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் அருகே பெரிய குனிச்சியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்(35) என்பவர், நேற்று முன்தினம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள கேட்டில் 2 காளைகளை கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவிந்தராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிந்தராஜ் போலீசாரிடம் கூறுகையில், ‘வெள்ளக்குட்டையில் இன்று(நேற்று முன்தினம்)எருது விடும் விழா நடைபெற்ற இடத்திற்கு காலை 6 மணிக்கு எனது காளையை அழைத்து கொண்டு சென்றேன். அங்கு விழா குழுவினரிடம் பணம் செலுத்தி 3வதாக டோக்கன் பெற்றேன். இதையடுத்து எருதுவிடும் விழாவில் காளையை விட வரிசையில் நிறுத்தப்பட்டது.

அப்போது விழா குழுவினர் முறைகேடாக பரிந்துரை செய்யப்பட்ட காளைகளுக்கு முன்னுரிமை வழங்கி களத்தில் விட்டனர். இதனால் எனது காளை இறுதி வரை விடாமல் புறக்கணிக்கப்பட்டது. காளையை எருதுவிடும் நிகழ்ச்சிக்கு கொண்டு சென்று மீண்டும் திரும்ப கொண்டு வருவதற்கு ₹10 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் எருதுவிடும் விழாவிற்கு அனுமதி வழங்க கூடாது’ என்றார்.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், கோவிந்தராஜ் போராட்டத்தினை தொடர்ந்தார். பின்னர், இவரை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post எருதுவிடும் விழாவில் முறைகேடு என போராட்டம் கலெக்டர் அலுவலக கேட்டில் காளைகளை கட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupathur Tirupathur ,Tirupathur ,Periya Kunichi ,
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...