×

75வது குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாதை

ரூ.59.10 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ரூ.59.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் 75வது குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், கலெக்டர் சரயு பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதான புறா மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி தங்க துரை முன்னிலை வகித்தார். தொடர்ந்து 33 சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, போர்வைகளை வழங்கி கவுரவித்தார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர், சிப்காட் தனி டிஆர்ஓ, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகியோருக்கு சிறப்பு விருதுகளும், 46 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்களும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 5 காவலர்களுக்கு விருதுகளும் வழங்கினார்.

மேலும், காவல்துறை, முன்னாள் படைவீரர் நலன், தீயணைப்பு – மீட்பு பணிகள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மருத்துவ நலப்பணிகள், 108 ஆம்புலன்ஸ், மருத்துவக்கல்லூரி, சித்த மருத்துவம், வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வனத்துறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 186 அரசு அலுவலர்களுக்கு, நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.

அதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு வருடாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.1.25 லட்சம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.35,400 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், மாவட்ட அளவிலான சிறந்த விடுதி மற்றும் விடுதிகளை நிர்வகிக்கும் காப்பாளர்கள் 3 பேருக்கு ரூ.18 ஆயிரம், வேளாண்மை துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.8,262, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டங்கள் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.54.05 லட்சம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.18 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயக்கும் சிறப்பு சக்கர நாற்காலி என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 10 ஆயிரத்து 447 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 805 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, ஏடிஎஸ்பி சங்கு, வேளாண்மை துறை இணை இயக்குநர் பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி, தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 75வது குடியரசு தின விழா கொண்டாட்டம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : 75th Republic Day ,Krishnagiri ,Krishnagiri district administration ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்