×

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கி.பி.13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் தனியார் கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞர் பெ.வெங்கடேசன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து மோகன்காந்தி கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜவ்வாதுமலையிலுள்ள புங்கம்பட்டு கிராமத்திற்குட்பட்ட கல்லாவூர் என்னும் ஊரில் கள ஆய்வை மேற்கொண்டோம். அங்குள்ள மாரியம்மன், பிள்ளையார் கோயில் இடையில் உள்ள பெரிய வேப்ப மரத்தின் அடியில் சுமார் 5 அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லின் இரண்டு பக்கங்களிலும் 47 வரிகளில் கல்வெட்டு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

இப்பெரிய கல் நீளவாக்கில் இரண்டாக உடைந்துள்ளது. பெரும்பள்ளியில் உள்ள ஈசனுக்கு கரைகண்டீஸ்வரர் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. ஸ்வஸ்தீ திரிபுவன சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவருக்கு 22வது ஆட்சி ஆண்டில், பெரும்பள்ளி ஊருடைய வேளாண் கூத்தன் கரையன் என்பவன் ‘முக்கண்ண’ என்கின்ற ஏரியை உருவாக்குகிறான். இன்றைக்கு பெரும்பள்ளியில் இந்த ஏரி அண்ணாமலை ஏரி என்று பெயர் மாற்றம் பெற்று வழங்கப்படுகிறது.

மலையின் மேட்டுப்பகுதியில் இருந்து ஓடிவரும் நீர்ப்பெருக்கு மூன்று பெரிய கரைகளையுடைய ஏரியில் தேக்கப்படுகிறது. முக்கண்ணன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். அதனால் முக்கண் ஏரி என்பது சிவபெருமானின் பெயரால் உருவான ஏரி என்று அறியலாம். மேலும், நீர் வெளியேறும் மதகு மூன்று கண்ணாக இருக்குமோ என்று ஆராய்ந்து பார்த்ததிலும் மூன்று கண்கள் இல்லை ஒரே கண்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானின் பல பெயர்களில் முக்கண்ணன் என்பதும் ஒன்று. திருவண்ணாமலைக்கு அருகாமையில் ஜவ்வாதுமலை உள்ளதால் புகழ்பெற்ற அண்ணாமலை என்ற சிவபெருமானின் மற்றொரு பெயரை இப்பகுதி மக்கள் மாற்றி வழங்கி வருகின்றனர் எனக்கருதலாம். தானம் வழங்குதல் ஜவ்வாதுமலை பெரும்பள்ளியில் உள்ள கரைகண்டீஸ்வரருக்குத்தளிகை (உணவு) படைப்பதற்காக 4 கலம் நெல்லும், ஏரியின் வடக்கு பகுதியின் கீழ்ப்பக்கம் உள்ள புஞ்செய் நிலத்தை தானமாகத் தருகிறான். இந்த நிலத்தின் எல்லைப்பகுதிகளை சிறப்பாக இக்கல்வெட்டுக்குறிக்கிறது. ஆட்டுப்பாறைக்கு வடக்கும், ஏரிக்கல்லு நெடுகல்லு வடக்கும், கடை கழனிக்குக்கிழக்கும் வடபாறை இதுக்கு கிழக்கும் உள்ள இடத்தை சூரிய, சந்திரன் உள்ளவரை தானமாகக் கொடுத்தேன் என்று கூத்தன் கரையனின் கல்வெட்டுக் கூறுகிறது.

காரியுண்டிக் கடவுள் இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூல் நன்னன் சேய் நன்னன் என்பவனின் மலை நவிரமலை என்கிறது. பெரும்பள்ளி உள்ளிட்ட 34 கிராமங்களை உள்ளடக்கிய திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 12 ஊர்களில் நவிரமலை என்கின்ற கல்வெட்டுகளை எங்கள் ஆய்வுக்குழுக் கண்டறிந்துள்ளது.

தேவர்களும், அசுரர்களும் அமிழ்தத்தை எடுக்க திருபாற்கடலைக்கடையும் போது வெளிப்பட்ட ஆலங்காய விஷத்தை தன் தொண்டர்களான அசுரர்களை காப்பதற்காக சிவபெருமான் விஷத்தை பருகுகிறார். விஷம் தன் கணவனுக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று அஞ்சிய பார்வதி, சிவனின் கழுத்தை பிடித்து விஷத்தை வெளியேற்ற முயற்சிக்கிறார். விஷம் வயிற்றுக்குள்ளும் செல்லாமல், வாய்க்கு வெளியேயும் வராது மிடற்றில் (கண்டம், கழுத்து) நின்று விடுகிறது. எனவே ஆலங்காய விஷத்தை அருந்திய ஈசனை காரியண்டிக் கடவுள் என்று மலைபடுகடாம் நூல் கூறுகிறது.
அவ்வையாரும் புறநானூற்றில் நீலமணிமிடற்று ஒருவன் (புறம் 91) என்று சிவபெருமானைக்கூறுகிறார். பெரும்பள்ளியில் கிடைக்கும் கல்வெட்டிலுள்ள கரைகண்டீஸ்வரர் என்ற பெயரை பிரித்துப் பார்த்தல் அவசியமாகும்.

எனவே சங்க காலத்தில் (கி.மு 1) எடுத்துரைக்கப்பட்ட காரியுண்டிக் கடவுள் கி.பி 13ம் நூற்றாண்டில் கரைகண்டீஸ்வரர் என்று மருவி வழங்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இதன் மூலம் நவிரமலை என்பது பருவதமலை அல்ல காரியுண்டிக்கடவுள் என்பது பருவத மலையிலுள்ள காளகண்டேஸ்வரர் அல்ல என்பதும் ஜவ்வாதுமலையும் பெரும்பள்ளியில் கோயில் கொண்டுள்ள கரைகண்டீஸ்வரரே காரியுண்டிக் கடவுள் ஆவர் என்று கருதலாம்.

பெரும்பள்ளியில் உள்ள சிவன் கோயிலில் பழமையான தூண்கள், பல சிலைகள், நந்தி என சிதைந்து கிடப்பது இவ்வூரின் பழமையை நினைவுப்படுத்துகின்றது. எனவே சங்க இலக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ள நவிரமலை, காரியுண்டிக் கடவுள் என்கின்ற சொல்லாட்சிகள் தொடர்ச்சியாக ஜவ்வாதுமலையில் கிடைப்பது சங்கப் பண்பாட்டை நினைவுப்படுத்துகிறது. சங்க காலத்தில் ஜவ்வாதுமலைக்கு வழங்கப்பட்ட நவிரமலை என்னும் பெயரையே மீண்டும் அம்மலைக்குச் சூட்ட வேண்டும் என்று எங்கள் ஆய்வுக் குழுவினர் சார்பாக மீண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் கி.பி.13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Jawwatumala ,Tirupathur ,Tirupathur Private College ,K. MOKANKANDHI ,ARCHEOLOGIAN B. Venkatesan, Kannilam Ltd. ,Munisamy, K. ,Mogankanthi ,Bungampattu ,Jawwatumalai ,Jawwatumalai Ki ,
× RELATED குரிசிலப்பட்டு அருகே சாராயம் விற்று...