×

கடன் தொல்லையால் விபரீதம் மகளை தூக்கிட்டு கொன்று மகனுடன் தந்தை தற்கொலை: உருக்கமான தகவல்கள்

சேலம்: சேலத்தில் கடன் தொல்லையால் மகளை கொன்று விட்டு மகனுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(54). கெமிக்கல் வியாபாரம் செய்து வந்தார். மனைவி நிர்மலா(50). ரிஷிகேசவன்(40) என்ற மகனும், பூஜா(23) என்ற மகளும் இருந்தனர். இன்ஜினியரிங் பட்டதாரியான ரிஷிகேசவன், தந்தையுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். பூஜா பி.காம்., படித்து விட்டு கோவையில் சிஏ தேர்வை எழுத தயாராகி வந்தார். இந்நிலையில், நேற்று நிர்மலாவின் உறவினருக்கு குழந்தை பிறந்தது. இதற்காக காலை 11 மணிக்கு நிர்மலா மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

பின்னர், மாலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, மரக்கட்டிலில் பூஜா மயங்கி கிடந்தார். அவரது கழுத்தில் தூக்கில் தொங்கிய அடையாளத்துடன் காயம் இருந்தது. அருகிலேயே கொக்கியில் மாடு கட்டும் கயிற்றை கட்டி, வெள்ளை வேட்டியில் வெங்கடேஸ்வரனும், அவரது மகள் ரிஷிகேசவன் தாயின் சேலையிலும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மலாவின் அலறினார். அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து 3 பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், அங்கு கிழங்கு மில் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், நிலங்களை விற்பனை செய்து விட்டு, மாசிநாயக்கன்பட்டிக்கு குடியேறினார். ஓராண்டுக்கு முன்பு, சொந்தமாக அங்கே நிலத்தை வாங்கி வீடு கட்டி, 6 மாதத்துக்கு முன்பு புது வீட்டிற்கு வந்துள்ளார். கெமிக்கல் வியாபாரம் செய்து வந்த அவருக்கு, இந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வியாபாரத்திற்காக பலரிடம் அவர் கடன் வாங்கியுள்ளார். பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தால், மன உளைச்சல் அடைந்த வெங்கடேஸ்வரன், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, நேற்று காலை வெங்கடேஸ்வரனும், ரிஷிகேசவனும், பூஜாவை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தனர். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட பிறகு, அவரது உடலை இறக்கி மரக்கட்டிலில் போட்டனர். பின்னர், வெங்கடேஸ்வரனும், ரிஷிகேசவனும் ஒரே கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனிடையே, வெங்கடேஸ்வரன் ஒரு நோட்டு புத்தகத்தில் யார், யாரிடம் தான் கடன் வாங்கினேன், எவ்வளவு பணம் வாங்கியுள்ளேன் என்பதை எழுதி வைத்துள்ளார். அந்த நோட்டை கைப்பற்றிய போலீசார், கடன் கொடுத்தவர்கள் யாராவது அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் விபரீதம் மகளை தூக்கிட்டு கொன்று மகனுடன் தந்தை தற்கொலை: உருக்கமான தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Venkateswaran ,Indira Nagar ,Salem Masinayakkanpatti ,Nirmala ,Rishikesavan ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...