×

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் விருது நன்றி சொல்ல நினைத்தபோது எனக்கு வார்த்தையே வரவில்லை: ஆனந்த கண்ணீர் சிந்தி ஆயி அம்மாள் பெருமிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் விருது வாங்கிய போது, முதல்வருக்கு நன்றி சொல்ல நினைத்தேன். அப்போது எனக்கு வார்த்தையே வரவில்லை என்று ஆனந்தக் கண்ணீர் சிந்தி பெருமிதத்துடன் ஆயி அம்மாள் தெரிவித்தார். மதுரை கிழக்கு ஒன்றியம். யா.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உ.ஆயி அம்மாள் என்ற பூரணம், தான் படித்த யா.கொடிக்குளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தும் வகையில் கட்டிடங்கள் கட்டுவதற்காக 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தனது மகள் ஜனனி என்பவரின் நினைவாகத் தானமாக வழங்கியுள்ளார். இதை பாராட்டி ஆயி அம்மாளுக்கு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் சிறப்பு விருதினை, சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருதுபெற்ற பின் ஆயி அம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற நேரத்தில், நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. முதல்வர் கையாலேயே விருது வாங்கியிருப்பதை எண்ணும்போது, நன்றி சொல்ல நினைத்தபோது வார்த்தையே வரவில்லை. அழுகையாக, ஆனந்தக் கண்ணீராகத் தான் வருகிறது. கல்வி வளர்ச்சிக்காக என்னுடைய மகளுடைய எண்ணம் நிறைவேறுவதற்காக நான் அளித்த நிலம் தொடர்பான செய்திகளும் விருதும் உலகளவில் இன்று பேசப்படுவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் படித்த பள்ளிக்கு நிலம் வழங்கிய செய்தியை அறிந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கல் விழாவின்போது கடந்த 17ம்தேதி என்னுடைய வீடுதேடி வந்து என்னை பாராட்டியது அதிர்ச்சியாகவும் எனக்கு ஆனந்தமாகவும் இருந்தது.

இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோரை, என் கணவரை, என் மகளை நினைந்து ஆனந்தம் அடைகிறேன். எனக்கு விருது வழங்குவதற்கு முன்னதாக திருநெல்வேலியைச் சேர்ந்த இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு தம்பிக்கு முதல்வர் விருது வழங்கினார். கடந்த டிசம்பரில் 18, 19ம் தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட துணிச்சலான செயலைப் பாராட்டி டேனியல் செல்வசிங்கிற்கு வீரதீரச் செயலுக்கான விருதையும் முதல்வர் வழங்கினார். அந்தக் காட்சியும் எனக்கு ஆனந்தத்தையும் பெருமிதத்தையும் அளித்தது. அதற்கும், முதல்வருக்கும் என்னுடைய சந்தோசத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஆயி அம்மாள் ஓர் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

The post தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் விருது நன்றி சொல்ல நினைத்தபோது எனக்கு வார்த்தையே வரவில்லை: ஆனந்த கண்ணீர் சிந்தி ஆயி அம்மாள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Ananda Kakar ,Sindhi Aai Ammal Perumitham ,Chennai ,M.K.Stalin ,Ai Ammal ,Madurai East Union ,U. Aai ,Kodikulam ,Ananda Kakar Sindhi Aai Ammal Perumitam ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...