×

இசையமைப்பாளர், பாடகி பவதாரிணி மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: இசையமைப்பாளர் மற்றும் பாடகி பவதாரிணி மறைவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து வேதனைஅடைந்தேன். வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரிணி, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. புதுவை முதல்வர் ரங்கசாமி: இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. தனித்துவம் வாய்ந்த குரலால் தனித்து நின்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): பவதாரிணி தனது தனித்த முயற்சியாலும் திறமையாலும் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகியாக திகழ்ந்தவர். அவரது மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் தேசிய விருதை வென்றது. பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடல்களை பாடியுள்ளார். இவரது இனிய குரல் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ் எம்பி): பவதாரிணி சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றவர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். மகளை இழந்து வாடும் சகோதரர் இளையராஜா தாங்க முடியாத இந்த துயரத்தில் இருந்து மீள வேண்டிய சக்தியை தர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்): தனித்துவமான இனிய குரல்வளத்தால் பல பாடல்களைப் பாடி ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்ற பெருமைமிக்கவர். இசையமைப்பாளராக பல படங்களுக்கு பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது. திருமாவளவன் (விசிக தலைவர்): இளையராஜாவின் அன்பு மகள் பவதாரிணியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பல பத்தாண்டுகள் வாழ வேண்டியவர். அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் வாய்ந்த பாடகர். எமது இயக்கப் பாடல் ஒன்றையும் பாடியவர். அவரது மறைவு கலையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பவதாரிணியை இழந்து வாடும் இளையராஜா குடும்பத்தினருக்கும், சக திரையுலகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): மிகக்குறைவான பாடல்களை பாடினாலும், இசை ரசிகர்களால் இப்போதும் அவை கொண்டாடப்படுகின்றன. இவ்வளவு சிறிய வயதில் கொடிய நோயில் சிக்கி பவதாரிணி, நம்மை விட்டு செல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மறக்கவே முடியாத பல பாடல்களை பாடிய பவதாரிணியின் மறைவு, அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்): தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தனித்துவமான இனிமையான குரலால் மக்களைக் கவர்ந்தவர். பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவரின் மறைவு இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

* தனித்தன்மையான குரல்: உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: இசைஞானி இளையராஜாவின் மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரிணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரிணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார்-நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இசையமைப்பாளர், பாடகி பவதாரிணி மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Bhavadharini ,CHENNAI ,O. Panneerselvam ,Former ,Chief Minister ,Bhavatharini ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...