×

டெல்லியில் 75வது குடியரசு தின விழா கோலாகலம் ஜனாதிபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார்: ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் கடமைப் பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றார். தொடர்ந்து நடந்த அணிவகுப்பில் நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் நவீன பீரங்கிகள், ரோடார்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்தியாவின் 75வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் துவக்கமாக தேசிய போர் நினைவு சின்னத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைக்கு, குதிரைகளால் இழுத்து வரப்பட்ட திறந்த சாரட் வண்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் வந்தனர். ஜனாதிபதியும், சிறப்பு விருந்தினரும் சாரட் வண்டியில் வரும் வழக்கம் கடந்த 40 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்தது. இந்த பாரம்பரிய முறை இந்த ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அவர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரமாண்ட அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்புக்கு டெல்லி பகுதி ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பவனேஷ் குமார் தலைமை தாங்கினார். அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அணிவகுப்பை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் மேடையில் இருந்து பார்வையிட்டனர். குடியரசு தின அணிவகுப்பின் துவக்கத்தில் வழக்கமாக ராணுவ பேண்ட் வாத்திய குழுவினர் இசைக் கருவிகளை இசைத்தபடி செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக 100 பெண் இசைக்கலைஞர்கள் நாதஸ்வரம், சங்கு, முரசு போன்ற பாரம்பரியமான இசைக் கருவிகளை இசைத்தபடி சென்றனர். தொடர்ந்து அணிவகுப்பில், முப்படை வீரர்கள் கலந்து கொண்டனர். கேப்டன் சந்தியா மக்ளா தலைமையில் முப்படைகளின் அனைத்து மகளிர் குழுவின் அணிவகுப்பு பார்வையாளர்களை பெரும் கவர்ந்தது. லெப்டினன்ட்கள் தீப்தி ரானா, பிரியங்கா செவ்தா ஆகியோர் ஸ்வாதி ஆயுதம் கண்டறியும் ராடார் மற்றும் பினாகா ராக்கெட் அமைப்பு பிரிவுகளுக்கு தலைமை வகித்தனர். சிஆர்பிஎப், எல்லை பாதுகாப்பு, எஸ்எஸ்பி ஆகிய துணை ராணுவத்தை சேர்ந்த 260 பெண் வீராங்கனைகள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுத்து வந்து மலர்களை தூவின. பிரான்சில் இருந்து இந்தியா வாங்கிய ரபேல் போர் விமானங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் உள்ளிட்ட 29 போர் விமானங்கள் வான் சாகசத்தில் ஈடுபட்டன. ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் வானில் பறந்தன. விமான சாகசத்தில் விமானப்படையை சேர்ந்த 15 பெண் விமானிகள் பங்கேற்றனர். சிஆர்பிஎப், எல்லை பாதுகாப்பு, எஸ்எஸ்பி ஆகிய துணை ராணுவத்தை சேர்ந்த 260 பெண் வீராங்கனைகள் மோட்டார் சைக்கிள் சாகசத்தை நிகழ்த்தினர். மேலும், வீர தீர செயல் விருதுகளை பெற்றவர்கள் அணிவகுத்து வந்தனர். சக்தி சைபர் பாதுகாப்பு, க்யூ. ஆர்.எஸ்.எம் விமான எதிர்ப்பு ஏவுகணை, உத்தம் ரேடார், டி90 பீரங்கிகள், டிரோன் தடுப்பு ஜாமர் கருவிகள், மின்னணு போர் கருவிகள், ராணுவ பீரங்கிகள் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. 16 மாநிலங்களை சேர்ந்த அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. அதில், தமிழ்நாடு சார்பில் இடம் பெற்றிருந்த வாகனத்தில், இன்றைய தேர்தலுக்கு முன்னோடியான குடவோலை முறையை விளக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. குடவோலை முறை குறித்த உத்திரமேரூர் கல்வெட்டு பற்றிய விவரமும் அந்த வாகனத்தில் இடம் பெற்றிருந்தது. அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் வந்தபோது, குடவோலை தந்த தமிழ்குடியே என்ற பாடல் ஒலிக்க அதற்கு வாகனத்தில் இருபுறம் நடன கலைஞர்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இந்த அலங்கார வாகனத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு கைதட்டி வரவேற்றார். உ.பி சார்பில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலும், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஒன்றிய அரசு துறைகள் சார்பில் 9 அலங்கார வாகனங்களும் இடம்பெற்றன. அணிவகுப்பு முடிந்ததும் விருந்தினரான மேக்ரானுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு சாரட் வண்டியில் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டார்.

* பாதுகாப்பு பணியில் 70 ஆயிரம் பேர்

குடியரசு தின விழாவையொட்டி டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர். டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு தின அணிவகுப்பு நடந்த கடமைப்பாதை பகுதியில் மட்டும் 14,000 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

* பொதுமக்களை சந்தித்த பிரதமர்

குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்ததும், பிரதமர் மோடி கடமை பாதையில் சிறிது தூரம் நடந்து சென்று அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கைஅசைத்தார். கூடியிருந்த பொது மக்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டும், கைதட்டியும் பிரதமரை வரவேற்றனர்.

* 13000 சிறப்பு அழைப்பாளர்கள்

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். இந்த விழாவில் பங்கேற்க 13 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் பல்வேறு திட்ட பயனாளிகள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள், யோகா ஆசிரியர்கள், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள், தூய்மை பணியாளர்கள், மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

* அணிவகுப்பில் பிரான்ஸ் குழு

டெல்லி அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவத்தினரும் பங்கேற்றனர். 95 பேர் கொண்ட பிரான்ஸ் ராணுவ குழுவினர் அணிவகுத்து வந்தனர். அத்தோடு, 30 பேர் கொண்ட பிரான்ஸ் நாட்டின் பேண்ட் வாத்திய குழுவினர் அனைவரையும் கவர்ந்தது.

* 6வது முறையாக பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு

இந்திய குடியரசு தினவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். கடந்த ஆண்டு எகிப்திய அதிபர் எல் சிசி பங்கேற்றார். இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் இதுவரை பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் 6 முறை சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர். அதிபர் மேக்ரான் தனது டிவிட்டர் பதிவில், பிரான்ஸ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. நன்றி. இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லியில் 75வது குடியரசு தின விழா கோலாகலம் ஜனாதிபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார்: ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : 75th Republic Day ceremony ,Delhi ,Golagalam ,President ,Murmu ,Chancellor ,Macron ,New Delhi ,75th Republic Day ,Tirupati Murmu ,Republic Day ,Emmanuel ,75th Republic Day Celebration ,President Murmu ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...