×

அனல் மின் நிலைய இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி நசுங்கி பலி

 

நெய்வேலி, ஜன. 26: நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலைய இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன அனல்மின் நிலையத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு நெய்வேலியை அடுத்து கொள்ளிருப்பு நயினார்குப்பம் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி (54) என்பவர் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.  நேற்று மதியம் 12 மணி அளவில் அவர் பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்.

இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இயந்திரத்தை நிறுத்தினர். தொடர்ந்து தெர்மல் போலீசார் வரவழைக்கப்பட்டு, தொழிலாளியின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சக்கரவர்த்தியின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு உடலை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் என்எல்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடும், சக்கரவர்த்தியின் மகனுக்கு நிரந்தர வேலையும் வழங்கப்படும் என என்எல்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சக்கரவர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சக்கரவர்த்தி அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார் என கூறப்படுகிறது.

The post அனல் மின் நிலைய இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Neyveli NLC ,NLC India ,Neyveli, Cuddalore district ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...