×

இணையத்தில் பதிவேற்றி சாதனை இலக்கை எட்டியது ‘சொற்குவை’: 15 லட்சம் தமிழ்ச்சொற்கள்

சென்னை: தமிழ்நாடு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்தின் இயக்குநர் விஜயராகவன் கூறியதாவது: கடந்த 1974ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்மொழியை காக்க அதன் சொற்களையும் காக்க வேண்டும் என்பதுடன், தமிழ் மொழியின் வளத்தை பெருக்க, அதில் இருக்கிற அத்தனை ெசாற்களையும் பதிந்து பாதுகாப்பதோடு காலத்துக்கேற்ப புதிய கலைச் சொற்களையும் வடிவமைத்து புழக்கத்துக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை முன்னெடுத்து செல்லும் வகையில் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் ‘சொற்குவை’ என்ற வலை தளம் கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழில் உள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் ெசாற்களையும் ஒன்று திரட்டி, அவற்றில் மீண்டும் வந்த சொற்களே வராமல் நிரல்படுத்தி தமிழின் சொல் வளத்தை உலகறியச் செய்வது, அதன் வழியே தமிழின் சொல் வளத்தைப் பெருக்குவது, தமிழ்ச் சொல் வளத்தைப் பதிவேற்றிப் பாதுகாப்பதும் அகரமுதலி இயக்கச் சொற்குவையின் நோக்கம். இந்த சொற்குவையில் 2024ம் ஆண்டில் 15 லட்சம் தமிழ்ச் சொற்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

சொற்குவைக்காக உருவாக்கப்பட்ட www.sorkuvai.com என்ற இணைய தளத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 3 லட்சத்து 91 ஆயிரத்து 682 சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ’அகராதியியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஊடக நண்பர்கள், மாணவ, மாணவியர் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு சொற்குவை வலைதளத்தில் அனைத்து துறைகளின் கலைச் சொற்கள் இடம்பெற வகை செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார். அதன் பேரில் சொற்குவையில் சொற்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அகர முதலி இயக்ககம் மேற்கொண்டது. அதன் பயனாக, 3.9.2021ல் 4 லட்சத்து 30 ஆயிரத்து 186 சொற்கள் என்று தொடங்கி 22.11.2023ம் தேதி வரையில் 14 லட்சத்து 2 ஆயிரத்து 350 சொற்கள் சொற்குவையில் சேர்க்கப்பட்டன. இதையடுத்து, 19.1.2024ம் தேதி வரையில் 15 லட்சத்து 8 ஆயிரத்து 213 சொற்கள் சொற்குவையில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 11 லட்சத்து 11 ஆயிரத்து 531 சொற்கள் இந்த சொற்குவையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post இணையத்தில் பதிவேற்றி சாதனை இலக்கை எட்டியது ‘சொற்குவை’: 15 லட்சம் தமிழ்ச்சொற்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Senthamil Etymological Akara Mudali Project ,Vijayaraghavan ,Chief Minister ,Karan ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்