×

உள்ளாடையை கழற்றி பெண் போலீசிடம் அநாகரீகம் இந்து அமைப்பு நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ்காரர் ஒருவர் கடந்த 6ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரயிலடி ஆஞ்சநேயர் கோயில் விலக்கு பகுதியில் ஆட்டோவில் வைத்து இந்து முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் குபேந்திரன் (எ) குமார் மற்றும் முத்தமிழ்செல்வம், ரவி ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த பெண் போலீஸ், அவர்களை கலைந்துசெல்லுமாறு கூறியுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த 3 பேரும் மதுபாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து 3 பேரையும் தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி 3 பேரும் தனித்தனியே ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, ‘‘பொதுஇடத்தில் மக்களுக்கு இடையூறாக நடக்கக் கூடாது என கூறிய பெண் போலீசிடம் குபேந்திரன் தனது உள்ளாடைகளை கழற்றி எறிந்து அநாகரீகமான முறையில் நடந்துள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, ‘இந்த வழக்கின் முதல் மனுதாரரான குபேந்திரன் மீது மேலும் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. முத்தமிழ்செல்வம், ரவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது,’என்று உத்தரவிட்டார்.

 

The post உள்ளாடையை கழற்றி பெண் போலீசிடம் அநாகரீகம் இந்து அமைப்பு நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thanjavur ,West Police Station ,Munnetra Kazhagam ,Kubendran (A) Kumar ,Anjaneyar temple ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...