×

அகிம்சை வழியில் நில உரிமை போராட்டம் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி

வால்பாறை: வால்பாறை கல்லார்குடியில் அகிம்சை வழியில் நில உரிமைக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற பழங்குடியின தம்பதி இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள கல்லார்குடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது கணவர் ஜெயபால். இவர்கள் காடர்பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினருக்காக தெப்பக்குளம் மேடு பகுதியில் நில உரிமை மீட்பு போராட்டத்தை அறவழியில் நடத்தியவர் ராஜலட்சுமி. மேலும் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று அம்மக்களுக்கு நிலஉரிமையையும் அவர் பெற்று தந்துள்ளார்.

இவரது செயலுக்கு பக்க பலமாக கணவர் ஜெயபால் இருந்து வருகிறார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, ஒன்றிய அரசின் பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தில் இருந்து, குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு இந்த தம்பதிக்கு அழைப்பு வந்துள்ளது. இவர்கள், குடியரசு தலைவர் தலைமையில் நடக்கும் அணிவகுப்பு மற்றும் விழாவில் கலந்து கொள்கின்றனர். அதன்பின், குடியரசு தலைவர் வழங்கும் விருந்திலும் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து பழங்குடியின தம்பதி ராஜலட்சுமி, ஜெயபால் ஆகியோர் கூறியதாவது:

ஆனைமலை குன்று மலைத்தொடரில் கல்லார்குடி பகுதியில் பல தலைமுறைகளாக கார்டர் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு நடந்த நிலச்சரிவில் கல்லார்குடி கிராமம் சிதலமடைந்தது. இதையடுத்து அருகில் உள்ள தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியேறினோம். அங்கு எங்களுக்கு குடியேற அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நடைபயணம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை அறவழியில் நடத்தினோம். இதன் எதிரொலியாக எங்களுக்கு தெப்பக்குளம் மேடு பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு அதற்கான உரிமையும் வழங்கப்பட்டது.

அறவழியில் நடைபெற்ற போராட்டம் முழு வெற்றி பெற்றது. போராட்டத்தின்போது மண் பானையில் கல்லார்குடியில் இருந்து மண்ணை எடுத்து வருவோம். அதேபோல் தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் ஒதுக்கிய பின்பு அப்பகுதியில் இருந்து பானையில் மண் எடுத்து வைத்துள்ளோம். இரண்டு பானையில் இருக்கும் மண்ணை வைத்து அப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கி வருகிறோம்.

நாங்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசுதின விழாவில் பங்கேற்க டெல்லி செல்கிறோம். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள், முக்கியத்துவம் வாய்ந்த, 75வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியரசு தின விழாவில் பங்கேற்க பழங்குடியின சேர்ந்த எங்களை தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அகிம்சை வழியில் நில உரிமை போராட்டம் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Valparai ,Kallargudi ,Rajalakshmi ,Coimbatore district ,Jayapal ,Republic Day Ceremony ,
× RELATED காட்டு தீயில் 50 ஏக்கர் மரங்கள் நாசம்