×

சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடக்கம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில்முனைவோருக்கான கண்காட்சி

சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். தாட்கோ மூலம் தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடக்கிறது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை வகிக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட பொருட்கள் 410 அரங்குகளில் இடம்பெறுகிறது. மேலும் வணிக நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ரசாயனப்பொருட்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 187 அரங்குகள் பங்கேற்கின்றன. வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே நேரடி விற்பனை செய்ய கைவினைப்பொருட்கள் மரஉபயோகப் பொருட்கள், அணிகலன்கள், டெரக்கோட்டா பொருட்கள், உணவு தயாரிப்பு பொருட்கள் போன்றவை 128 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழில்முனைவோர் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், சுயதொழில் செய்பவர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்த மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். தொழில் முனைவோர் புதிய தொழில் தொடங்குவதற்கும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறவும், ஏற்றுமதி செய்வதற்கான விழிப்புணர்வும், தொழில்துறையில் சிறந்து விளங்கும் சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கமும் இக் கண்காட்சியில் நடைபெற உள்ளது.

The post சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடக்கம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில்முனைவோருக்கான கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai Trade Centre ,Chennai ,Tamil Nadu Government ,Minister ,Udayaniti Stalin ,Adiravidar ,Indigenous Entrepreneurs ,Thadko ,Adhiravidar, Indigenous Entrepreneurs Exhibition ,Chennai Trade Center ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...