×

பல பிரமாண்ட வசதிகளுடன் மெரினா, பெசன்ட் நகர், கோவளம் கடற்கரையை மேம்படுத்த திட்டம்: சிம்டிஏ நடவடிக்கை

சென்னை: மெரினா, பெசன்ட் நகர், கோவளம் கடற்கரையை மேம்படுத்த சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று முக்கியமான கடற்கரைகளைச் சீரமைக்கச் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொழுது போக்கிற்கு பல இடங்கள் இருந்தாலும் அதில் பலருக்கும் முக்கியமாக இருப்பது கடற்கரைகள் தான். பட்ஜெட் விலையில் குடும்பத்துடன் வெளியே சென்று வர ஏற்ற இடமாகவும் பீச்கள் உள்ளன. படம், மால், பொழுதுபோக்கு பூங்கா என எங்குச் சென்றாலும் போய் வர செலவு, டிக்கெட் செலவு பார்க்கிங் செலவு, உணவுக்குத் தனி செலவு என்று எகிறிக் கொண்டே இருக்கும்.

எனவே, குறைந்த பட்ஜெட் செலவில் பொழுதைப் போக்க ஏற்ற ஒரு இடமாக பீச்கள் இருக்கிறது. அதேநேரம் இப்போது சென்னையில் இருக்கும் பல பீச்சுகளில் முறையான பராமரிப்பு இல்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. எந்தவொரு பீச்சிற்குச் சென்றாலும் குப்பைகள் நிரம்பியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருக்கிறது. இவை கடல் வாழ் உயிரினங்களையும் சரி, கடலையும் சரி மோசமாகப் பாதிக்கும் ஆபத்தும் இருக்கிறது. இதனால் கடற்கரைகளை மறுசீரமைப்பது இப்போது முக்கிய தேவையாக இருக்கிறது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு இதற்கான நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக மூன்று கடற்கரைகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவளம், எண்ணூர் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளைச் சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்யச் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி தெரிவித்ததாவது:

கடற்கரைகளைப் பசுமையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். குப்பைகளைப் போட ஏதுவாகப் பீச்சில் பல இடங்களில் தேவையான குப்பைத் தொட்டிகள் ஏற்படுத்தப்படும். இந்தப் பணிக்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மீன் அங்காடிகள், பொழுதுபோக்கு மைதானம், கோயில் வளாகம், கடற்கரை மேல் செல்லும் வகையில் மரப்பாலம், பல்வேறு கடைகள், சைக்கிள் பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், மருத்துவ வசதி, புல்வெளி மற்றும் அமரும் வசதி, வாகன நிறுத்த வசதி, கழிவறை, சுற்றுலா சார்ந்த பணிகள், செயற்கை நீருற்றுகள், கடற்கரை ஓரத்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், சாகச அம்சங்கள், உணவகம், நடைபாதை, காட்சியம்,வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு ஆய்வுகள், கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்ற உடன், அறிக்கையின் அடிப்படையில் மேம்பாட்டு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், வடசென்னையில் உள்ள கடற்கரை ஓரங்களில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்பட்டுள்ளது, அதன் ஒரு பகுதியாக வடசென்னையில் உள்ள ​காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்ததையடுத்து இந்த கடற்கரை ஓரங்களை சீரமைத்து, நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் தூய்மைப்படுத்தி, மறுசீரமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கடந்தாண்டு அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாகவே முதற்கட்டமாக இந்த மூன்று கடற்கரைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பல பிரமாண்ட வசதிகளுடன் மெரினா, பெசன்ட் நகர், கோவளம் கடற்கரையை மேம்படுத்த திட்டம்: சிம்டிஏ நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Marina ,Besant Nagar ,Kovalam Beach ,CMDA ,CHENNAI ,Chennai Metropolitan Development Corporation ,Kovalam ,Dinakaran ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...