×

டிஆர்பி மூலம் ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித்துறையில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்படும் நபர்கள்தான் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்போது நிரப்பும் போது பின்பற்ற வேண்டியவை குறித்தும், அதற்கான கால அளவுகள் குறித்த அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட நபர்களை பணி நியமனம் செய்யும் போது, பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை மே மாதத்துக்குள் கண்டறியப்பட வேண்டும்.

அவ்வாறு கண்டறியப்படும் நபர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மே 31ம் தேதிக்குள் பணி நிரவல் செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் ஜூன் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட மதிப்பீடு ஜூலை 1ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரும் கருத்துருக்கள் இருந்தால் அவற்றை ஜூலை 15ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்படி ஆசிரியர்கள் நியமனங்களுக்காக ஜனவரி 31ம் தேதிக்குள் போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.

இந்த போட்டித் தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தெரிவு செய்யப்பட்ட நபர்களின் இறுதிப் பட்டியல்கள் மே 1ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவித்துள்ளார்.  இதேபோல, இடைநிலை ஆசிரியர்களில் காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்புவதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் பட்டியல் தயாரிக்கும் பணி 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிப்ரவரி 4ம் தேதியில் தொடங்க உள்ளது. இந்நிலையில், 2582 பணியிடங்கள் போட்டித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பட உள்ளன. இதற்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 41 ஆயிரத்து 478 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

The post டிஆர்பி மூலம் ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,School Education Department ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...