×

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலம்: பழநியில் தேரோட்டம் திருச்செந்தூரில் அலைகடலென குவிந்த பக்தர்கள்

பழநி: லட்சக்கணக்கான பகதர்களின் அரோகரா கோஷம் முழங்க தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் தைபூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமரசுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 11.45 மணிக்கு மேல் மீன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளி – தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் உலா வந்தனர். கோயில் யானை கஸ்தூரி பின்தொடர பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வந்தது. தேரோட்டம் காரணமாக நேற்று முன்தினம் முதலே பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கினர். முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயு கந்தபெருமான், வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் சுவாமி தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். தைப்பூசத் திருவிழாவில் முருகனை வழிபடுவதற்காக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். அரோகரா கோஷம் முழுங்க கடலில் புனித நீராடி விரதம் முடித்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், ஆறாம்படை வீடான பழமுதிர்சோலை, தஞ்சை சுவாமிமலை, திருத்தணி ஆகிய முருகன் கோயில்களில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதுதவிர நாகை எட்டுக்குடி, புதுகை விராலிமலை, திருச்சி வயலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

 

The post லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலம்: பழநியில் தேரோட்டம் திருச்செந்தூரில் அலைகடலென குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Lakhs ,Arokara ,Gosham ,Vinadhira Murugan ,Arupada Houses Thaipusa Festival Kolakalam ,Palani Chariot ,Palani ,Taibhusa festival ,Tamil Nadu ,Arupada ,Lord Murugan ,Bhagats ,Arokhara Kosham ,Dindigul District ,Palani Thandayuthapani Swamy Temple Thaipusa Festival ,Devotees ,Arupada Houses Thaipusa Festival Kolakalam: ,Tiruchendur ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...