×

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யவேண்டும்: டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு

புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் பதிலளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது வரையில் இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். இந்தநிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனுவை ஏற்கனவே தாக்கல் செய்த மனுதாரர் இன்று புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், \”அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த பிரதான வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அந்த விவரத்தை உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மறைத்து விட்டார். அதேப்போன்று, அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்திலும் முன்னதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை நடந்த வழக்குகளும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ற இரு தனி நபர்களுக்கு இடையில் நடந்த அதிகாரப் போட்டிக்கான வழக்குகளாகும். குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக கட்சி தொடர்பான சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தவறானதாகும். அதுபோன்ற தன்னிச்சையாக முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. மேலும் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகள் 1968கீழ் மனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் கட்சி சம்பந்தமான விவகாரங்களில் தலையிட முடியும். குறிப்பாக எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும் முன்பு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் அளித்த 9 மனுக்களை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாமல் முடிவை அறிவித்துள்ளது.

அதனால் அது சட்ட விதிகளின் படி செல்லத்தக்க ஒன்று கிடையாது. ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி உடனடியாகவும், மிக விரைவாகவும் நீதிமன்றங்களில் பதில் மனு மற்றும் விளக்க மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தாங்கள் தாக்கல் செய்த சிவில் வழக்கு மற்றும் இடையீட்டு மனுக்களில் 18 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் ஒரு பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. ஏனெனில் அடிப்படை உறுப்பினர்கள் வழக்கில் அவர் பதில் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்றங்கள் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பும். அது எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும். ஏன் அவரது பொதுச்செயலாளர் பதவிக்கே தடை விதிக்கப்படும்.

இவை அனைத்தையும் தெரிந்து தான் அவர் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்து வருகிறார். அதனால் அதிமுக கட்சி மற்றும் பொதுச்செயலாளர் நியமனம் ஆகியவை தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு வரும் வரையில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவருகிறது.

The post அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யவேண்டும்: டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Edappadi Palanisami ,Secretary General ,Delhi ICourt ,NEW DELHI ,DELHI ,CHIEF ELECTORAL COMMISSION OF INDIA ,OF THE MAJESTY ,Extraordinary General Committee ,Delhi Eicourt ,Dinakaran ,
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...