×

தருமபுரி தொப்பூரில் உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும்: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தருமபுரி தொப்பூரில் உடனே உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல்வேறு வாகனங்களை உள்ளடக்கி நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தருமபுரியிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்குந்து தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மூன்று மகிழுந்துகள் மற்றும் இன்னொரு சரக்குந்து மீது மோதிய பயங்கரமான சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சரக்குந்து மோதியதில் தீப்பிடித்த முதல் மகிழுந்தில் இருந்த நால்வர் உடல் கருகி உயிரிழந்து விட்டனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது மகிழுந்துகளும் விபத்துக்குள்ளானதில் அவற்றில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். விபத்துக்குள்ளான சரக்குந்துகளில் ஒன்று பாலத்திலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுனரும், உதவியாளரும் வெளியில் குதித்து தப்பியுள்ளனர். இந்த விபத்துகளில் மொத்தம் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தொப்பூர் பகுதியில் நேற்று நடந்ததை விபத்து என்று கூற முடியாது, ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது என்பதையும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் ஆபத்தான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தொப்பூர் சாலையின் வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதவில்லை.

அந்த வகையில் பார்த்தால் தொப்பூரில் நடந்தது விபத்து அல்ல… ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொடூர படுகொலை என்று தான் கூற வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராக நான் பணியாற்றிய போது, தொப்பூர் பகுதி நெடுஞ்சாலையை விபத்து இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். அதனடிப்படையில் 2017-18 ம் ஆண்டில் போக்குவரத்துக் காவல்துறை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து எல் அண்டு ட்டி நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு தொப்பூர் சாலையை ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட சாலை சீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் நடக்காமல் தடுக்க ரூ.775 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்க கடந்த மாதம் ஒன்றிய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தொப்பூர் பகுதியில் விபத்து நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. தொப்பூர் கொலைகாரச் சாலையில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

ஒன்றிய அரசால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள தொப்பூர் உயர்மட்டச் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது மட்டும் தான் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒரே தீர்வு ஆகும். இதை உணர்ந்து தொப்பூர் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை உடனடியாக இறுதி செய்து பணிகளைத் தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தருமபுரி தொப்பூரில் உயர்மட்ட சாலை பணியை தொடங்க வேண்டும்: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dharumpuri Topur ,Pa. M. K. President ,Anbumani Ramadas ,Chennai ,Thumpuri Toppur ,M. K. ,Toppur Kanavai ,Dharmapuri district ,Tharumpuri ,Toppur ,Dinakaran ,
× RELATED பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு..!!