×

செட்டிநாடு தறி கைத்தறி புடவையில் நான் ரொம்பவே ஸ்பெஷல்!

நன்றி குங்குமம் தோழி

‘செட்டிநாடு’ பலகாரத்துக்கு மட்டுமில்ல கைத்தறி புடவைக்கும் ஃபேமஸ்தான் என புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தவர் “செட்டிநாடு தறி” எனும் பெயரில் கைத்தறி புடவை விற்பனையில் கவனம் செலுத்தியவாறே, சென்னை ஆழ்வார் பேட்டையில் பொட்டிக் ஒன்றை நடத்தி வரும் மகாலெட்சுமி. கைத்தறி புடவை விற்பனையில் தான் சாதித்த கதையை நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘எனக்கு ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை. என்னை திருமணம் செய்து கொடுத்தது காரைக்குடி அருகே அரியக்குடி கிராமம். +2 வரைதான் படித்தேன். திருமணத்திற்குப் பிறகு கணவரோடு நுங்கம்பாக்கத்தில் குடியேறிய நிலையில் ஒரு பையன் ஒரு பொண்ணு என இரட்டைக் குழந்தைகள் எங்களுக்குப் பிறந்தனர். குழந்தைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களாகி பள்ளி இறுதி வகுப்பை தொட்டபோது, வீட்டில் நான் மட்டும் வெட்டியாய் இருப்பது மாதிரியான ஃபீலிங் இருந்தது. அப்போது எனது உறவுக்கார அக்கா ஒருவர் காரைக்குடியில் புடவைத் தொழிலை வீட்டில் வைத்து செய்து வருவதை கவனித்தேன். ஒரு பத்து புடவைகளை உனக்குத் தருகிறேன்.

வீட்டில் வைத்தே விற்பனை செய்து பார் என என் ஆர்வத்தை தூண்டினார்.தடுக்கி விழுந்தால் தி.நகரில் துணிக் கடைகள்தான். எல்லாமே அங்கு கிடைக்கும். அவ்வளவு கடைகள். இதில் நம்மிடத்தில் வந்து யார் புடவை வாங்குவா? என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஒரு விஷயத்தில் தனிக் கவனம் வைத்து யுனிக்காக நாம் செய்தால் வாடிக்கையாளர்கள் கண்டிப்பா நம்மைத் தேடி வருவார்கள் என அக்கா எனக்கு நம்பிக்கை கொடுத்தார். சரி, செய்துதான் பார்ப்போமே என ஒரு பத்துப் புடவைய அவரிடத்தில் வாங்கிவந்து, என் வீட்டில் வைத்து விற்பனையை ஆரம்பித்தேன்.

துவக்கத்தில் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதைதான். எதுவுமே தெரியாமல்தான் சேலை விற்பனைத் தொழிலுக்குள் வந்தேன். முதலில் இரண்டு வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் மூலம் இன்னும் 4 வாடிக்கையாளர் என வாய்வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் விரிவடைந்தனர். முதல் 5 ஆண்டுகள் இப்படியே சென்றது. சமூக ஊடகங்கள் இன்னும் கொஞ்சம் வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்தது என்றவர், ஆன்லைன் விற்பனைதான் அதிகமான வாடிக்கையாளர்களை எனக்குப் பெற்றுத் தந்தது’’ என்கிறார் விரல் உயர்த்தி.

‘‘ஆன்லைன் பிஸினஸ் அறிமுகமாகாத 2013 காலகட்டத்தில், எனது புடவைகளை ஸ்டூலில் வைத்தும், வீட்டு வராண்டாவில் விரித்து வைத்தும் நானே புகைப்படங்களை எடுத்து முகநூலில் ஏற்றத் தொடங்கினேன். அப்போது ஒரு லைக் வந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். பிறகு இன்ஸ்டா, யு டியூப் போன்ற வலைத்தளங்கள் வரத் தொடங்கியது. ஆன்லைன் விற்பனைக்காக என்னதான் ஹைகுவாலிட்டி கேமரா வைத்து படம் எடுத்தாலும், டர்க்காஷ் கலர்களை சற்று மாற்றித்தான் கேமரா காட்டும். எனவே நேரடியாக கடைக்குச் சென்று வாங்கினால்தான், நமக்கான உடைகளை ஃபீல் செய்து வாங்க முடியும்’’ என்கிறார் அனுபவ முதிர்ச்சியினை வெளிப்படுத்தி.

‘‘2010ல் தொடங்கி இன்றோடு 13 வருடமாச்சு. தத்தி தத்தி.. தவழ்ந்து.. நிமுந்து.. நடந்துன்னு இன்றைக்கு நிறைய வாடிக்கையாளர்களை என் நேர்மைக்காகவும், தரத்திற்காகவும் சம்பாதித்து வைத்திருக்கிறேன். எனக்கான வாடிக்கையாளர்கள் தமிழ்நாடு தாண்டி, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, யு.எஸ் என அங்குள்ள தமிழர்களும் கைத்தறிப் புடவைகளை என்னிடத்தில் மொத்தமாக ஆர்டர் செய்து கொள்முதல் செய்கிறார்கள்’’ எனப் புன்னகை மாறாமல் பேசும் மகாலெட்சுமியின் பேச்சும் சிரிப்பும் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டத்தை அடையாளப்படுத்துகிறது.

‘‘புடவை தயாரிப்பில் இருக்கும் கைத்தறி நெசவாளர்களைத் தேடி சிவகங்கை, காரைக்குடி, மதுரை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் என பயணித்து, அங்குள்ள குட்டி குட்டி கிராமங்களில் செயல்படும் நெசவாளர்களை அணுகி, தறிபோடும் முறையை நுட்பமாகக் கேட்டு அறிந்து, என் விருப்பத்திற்கு பிடித்த கலர் மற்றும் டிசைன்களை தறியில் போட்டுத் தருவதற்கான விஷயங்களையும் நெசவாளர்கள் மூலமாக செய்யத் தொடங்கினேன்.

தரமான நூலை நானே மொத்தமாக கொள்முதல் செய்து, தேவையான கலரை சாயம் ஏற்றி, என் விருப்பத்திற்கு டிசைன் வரைந்து அட்டையாக்கி நெசவாளர்களிடத்தில் கொடுத்து அவற்றை சேலைகளாக வாடிக்கையாளர்களிடத்தில் சேர்க்கத் தொடங்கினேன். சாயம் மொத்தமும் ஒரே மாதத்தில் தண்ணீரில் போகாத மாதிரியும், வரிவரியாக நூல் நெய்வதில் இடைவெளி தெரியாத மாதிரியும் தறிபோடும் போது, அதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.

வீட்டில் இருந்து செய்த விற்பனையை 2016ல் கடைக்கு மாற்றினேன், அப்போது நாங்கள் ஆழ்வார்பேட்டைக்கு வீடு மாறி இருந்தோம். குறிப்பிட்ட ஒரு சமூகத்து மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், அவர்கள் 9 கஜம், 10 கஜம் புடவைகளை கேட்டு அதிகம் வந்தனர். அவர்களின் விருப்பத்திற்காகவும் செட்டி நாட்டு காட்டன் மற்றும் மதுரை சுங்கடிப் புடவைகளில் 9 மற்றும் 10 கஜங்களில் மடிசாருக்கு ஏற்ற அளவுகளில் தயாரித்து தரச் சொல்லி விற்க ஆரம்பித்தேன்’’ என்கிற மகாலெட்சுமி, மதுரை சுங்கடிச் சேலையில் 10க்கும் மேற்பட்ட வெரைட்டி வைத்திருப்பதுடன், இன்று மதுரை சுங்கடிச் சேலை விற்பனையில் சென்னையில் டாப்பில் இருப்பதாக தெரிவிக்கிறார் வெற்றிப் புன்னகையோடு.

‘‘பெரும்பாலும் என்னுடையது செட்டிநாடு சேலைகள்தான். செட்டிநாடு காட்டன், மதுரை சுங்கடி தவிர்த்து மற்ற ஊர் ஸ்பெஷல் கைத்தறிகளையும் வாங்கி விற்கிறேன். என்னுடையது நேரடி கொள்முதல் என்பதால் விலையும் குறைவு. இதில் செட்டிநாடுபுட்டா சேலை, த்ரெட் பார்டர் சேலை, ஷரி பார்டர் சேலை, செக்டு சேலை, தாழம்பூ டிசைன் சேலை, கங்கா ஜமுனா டபுள் கலர் சேலை, லாங் பார்டர் சேலை, டபுள் பார்டர் சேலை, ருத்ராட்சம் பார்டர் சேலை, யானை பார்டர், மான் பார்டர், மயில் பார்டர் சேலைகள், கண்டாங்கி சேலை இத்துடன் மதுரை ஷாஃப்ட் சுங்கடி சேலை, ஈரோடு காட்டன், கோவை காட்டன், காஞ்சிபுரம் சில்க் காட்டன், மங்களகிரி, அஜ்ரக், பேஜம்புரி, இக்கட், கலம்காதி, ஜெய்ப்பூர் காட்டன், கொல்கத்தா காட்டன் சேலைகளும் கிடைக்கும். இவற்றுக்கான ஜாக்கெட்டுகளை நாங்களே பேப்ரிக் செய்து மேட்ச் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

நான் தொழிலுக்குள் வந்ததைத் திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பத்து புடவையோடு தொடங்கிய வியாபாரத்தில், ஒரு புடவைய வித்துருவோமா என யோசித்த நாட்களும் இருந்தது. இன்று இவ்வளவும் நானா செய்கிறேன் எனத் தோன்றும்’’ என்றவர், ‘‘ஐபிஎம்மில் பணியாற்றியபடியே என் தொழிலுக்கும் துவக்கத்தில் இருந்து நிறைய ஒத்துழைப்பு கொடுத்தவர் எனது கணவர் ராமசாமிதான். இன்று இந்த உயரத்தை தொட்டதற்கு அவரின் வழிகாட்டுதலும் முக்கியக் காரணம்’’ என்றதுடன், ‘‘நியாயமாக நேர்மையாக நமது தொழிலைச் செய்தால் வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி தொடர்ந்து கண்டிப்பாக வருவார்கள்’’ என்கிறார் மிகவும் அழுத்தமாக அனுபவ வார்த்தைகளை உதிர்த்து.

சிறிய அளவில் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு ரோல் மாடலாய் இருக்கும் மகாலெட்சுமி, “நமது எதிர் வீடு, பக்கத்து வீடு, நமது உறவினர்கள், நட்பு வட்டங்களே நமக்கு முதல் வாடிக்கையாளர்கள். அவர்கள் மூலமாகவே அடுத்தடுத்து வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதையும் தாண்டி இன்று சமூக வலைத்தளங்களும் விற்பனைக்கு வழிகாட்டுகின்றன. முயன்றால் எதுவும் சாத்தியமே’’ என்கிறார் நம்பிக்கை வார்த்தைகளை உதித்தவராக.

தேவக்கோட்டை என்கிற சிற்றூரில் பிறந்து, வெளி உலகம் தெரியாத பெண்ணாய் சென்னைக்குள் கணவருடன் மகாலெட்சுமி நுழைந்தபோது, சென்னையின் பரபரப்பில் கண்டிப்பாக மலங்கமலங்க விழித்திருப்பார்தான். ஆனால் இன்று!!! ‘‘ஒரு தளம் முழுக்க கைத்தறி பட்டுப் புடவைகளை அடுக்கணும் என்பதே என் அடுத்த கனவு’’ என்கிறார். ‘‘தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு உடைகளை எடுக்க வரும் பெண்கள், தங்கள் தேவைகள் அனைத்தையும் என் கடைக்குள்ளேயே முடித்து மன நிறைவோடு செல்ல வேண்டும்’’ என்கிற தனது அடுத்தடுத்த கனவுகளையும் பதிவு செய்தவராக விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post செட்டிநாடு தறி கைத்தறி புடவையில் நான் ரொம்பவே ஸ்பெஷல்! appeared first on Dinakaran.

Tags : Chettinad ,Kunkumum ,Chettinadu ,Mahaletsumi ,Chennai ,Alwar ,Pettah ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!