×

சிறுகதை-அக்கறை

நன்றி குங்குமம் தோழி

‘‘இந்த ஸ்டூடண்ட் கிட்ட நீங்க பாரபட்சம் காட்டுறதா பையனோட அம்மா சொல்றாங்க’’ என்று முதல்வர் கமலாவிடமிருந்து வந்த வார்த்தைகளில் சற்றே நிலைகுலைந்து போனாள் ரம்யா. தன் பார்வையை இடதுபுறம் நோக்கித் திருப்ப, நாற்காலியின் கைப்பிடியில் தனது வலது முழங்கையை ஊன்றி, உள்ளங்கையில் முகம் வைத்து, கண்களில் வெறுப்பைத் தேக்கி அவளை முறைத்துக் கொண்டிருந்தாள் லதா. தன் பக்கவாட்டில் நின்றிருந்த சிபியை ஏறிட்டாள் ரம்யா. அந்த ஒன்பது வயது சிறுவனின் முகத்தில் குழந்தைத்தனமும் பயமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தன. ‘‘மேடம், நான் எந்தவிதத்தில பாரபட்சம் காட்டினேன்னு சொல்லமுடியுமா?’’ என்றாள் ரம்யா இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

‘‘எல்லாவிதத்திலயும்தான். என் பையனை கிளாஸ்ல எழுந்து நின்னு செய்யுள் வாசிக்க சொல்லியிருக்கீங்க. அவன் தப்பா வாசிக்கறதைக் கேட்டு சில பசங்க சிரிக்க, இவனுக்கு அவமானமா போயிடுச்சு. அன்னிக்கு வீட்டுல வந்து அழுதான். எனக்கு மனசுக்கு கஷ்டமாப் போயிடுச்சு. அதுமட்டுமில்லை. எதுக்கு இம்போசிஷன்லாம் கொடுக்கறீங்க?’’ ஆக்ரோஷமாய் வெளிப்பட்டது சிபியின் தாயின் குரல்.

‘‘நாலாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு ஒரு திருக்குறள் கூட முழுசாத் தெரியல. அதான் அஞ்சு மனப்பாட குறள்களை வீட்ல இரண்டு தடவை எழுதிப் பார்க்கச் சொன்னேன். அது இம்போசிஷன் இல்லைங்க. எழுதிப் பார்க்கிறப்போ சுலபமா மனசில பதியும். அப்புறம், தமிழைப் பிழையில்லாமல் வாசிக்கத் தெரிஞ்சுக்கணும்ங்கிற நோக்கத்துல, கிளாஸ்ல எல்லாப் பிள்ளைகளையும் தினமும் சத்தமா வாசிக்க வைப்பேன். வார்த்தைகளுக்கு அவங்க நாக்கு நல்லாப் பழகணும் இல்லையா?’’‘‘என் பையன் தமிழ்ல கம்மியா மார்க் வாங்கிட்டுப் போறான். அதுக்காக அவனை கார்னர் பண்ற வேலை எல்லாம் இனி வச்சுக்காதீங்க. அது அவனை கடுமையான மன உளைச்சல்ல தள்ளிடும்” என்றதும் திடுக்கிட்டாள் ரம்யா.

‘‘இங்க பாருங்க மிஸ். நீங்க கல்யாணம் ஆகாத சின்னப்பொண்ணு. குழந்தைங்க மனசு உங்களுக்குப் புரியாது. தயவுசெய்து என் பையனை விட்டுடுங்க. எந்தவிதத்திலும் இனி அவனை நீங்க டார்ச்சர் பண்ணக்கூடாது. அவனால முடிஞ்ச அளவு படிச்சா போதும். எனக்குன்னு இருக்கிறது இவன் மட்டும் தான். இவன் தான் என் உலகமே’’ சட்டென கண்கள் கலங்கின லதாவுக்கு. கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று பையனுடன் தனியாக வாழும் ஒற்றைப் பெற்றோர் அவள்.

அவளது அழுகையில் மனம் கரைந்த முதல்வர், ‘‘ரம்யா மிஸ், பேரன்ட்ஸ் மனசு கோணாம நடந்துக்கப் பாருங்க முதல்ல. இது பெரிய இடத்துப் பையன்கள் படிக்கிற கௌரவமான ஸ்கூல். ஞாபகம் இருக்கட்டும்” என்றார் அழுத்தமாக. இனி சிபியின் மேல் தனிக்கவனம் செலுத்துவதில்லை என உறுதியளித்து விட்டு தன் வகுப்பறை நோக்கி நடந்தாள் கனத்த மனதுடன். இரண்டு ஏக்கர் பரப்பளவில் நீச்சல் குளம், கால்பந்து மைதானம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய, நகரின் பிரபலமான அந்தப் பள்ளியில் தமிழாசிரியை வேலை கிடைத்த போது மகிழ்ச்சியில் தான் துள்ளிக்குதித்தது நினைவு வந்தது அவளுக்கு. வாங்கும் சம்பளத்திற்கு மட்டும் கடனே என வேலை பார்க்காமல் பிள்ளைகள் மேல் தனிக் கவனம் செலுத்தினாள். சொல்லப்போனால் ஒவ்வொரு பிள்ளை மேலும் தனிப்பட்ட அக்கறை காட்டினாள். அதன் விளைவு தான் இன்று அவள் சந்தித்தது.

தன் கடமையை சரியாக செய்ய முயலும் ஒரு ஆசிரியருக்கு இப்படி ஒரு முட்டுக்கட்டையா?

லதாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்தன. ஒரு மாணவனை நன்றாகப் படிக்க வைக்க ஒரு ஆசிரியர் எடுக்கும் முயற்சிகள் அவனை மனஉளைச்சலுக்கு ஆளாக்குமா என்ன? முதலில் அந்த வார்த்தைக்கு இந்த சிறுவனுக்கு அர்த்தம் தெரியுமா? இவன் மேல் நான் காட்டுவது பாரபட்சமில்ல. தனிப்பட்ட அக்கறை!

இதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா அந்தத் தாயால்?

‘கடவுளே….. ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்த்த சமூகம் தானே இது….?’ ‘கண்ணை மட்டும் விட்டுடுங்க. மத்தபடி நீங்க தோலை உரிச்சாலும் ஏன்னு கேட்க மாட்டோம். எம்புள்ளை ஒழுக்கமானவனா இருக்கணும், ஓரளவு நல்லாப் படிக்கணும்’ என்று சொன்ன பெற்றோர் எங்கே? ஒழுங்காக டிரஸ் செய்து கொண்டு வா. காடாய் வளர்ந்திருக்கும் முடியை சீராக வெட்டிக்கொண்டு வா. நன்றாகப் படி…! என்று சொல்லும் ஆசிரியர்களை எதிர்க்கும் மாணவர்கள். அவர்களை ஆதரிக்கும் பெற்றோர். இதுதானே இன்றைய நிலை. …? பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவளிடமிருந்து.

‘என்றைக்கு கல்வி வியாபாரமாக மாறியதோ, அன்றே ஆசிரியர் சமூகம் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு விட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் பாடம் போதிக்கும் பரிதாப நிலையில் இருக்கிறது. இரண்டு மூன்று டிகிரி படித்து விட்டு, மிகக்குறைந்த ஊதியத்தில், அதிக வேலைப்பளுவில், கூடுதலாக மனஉளைச்சலுக்கும் ஆளாவது என்னைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் அல்லவா? தற்போதைய சூழலில் மிகுந்த மன அழுத்தத்திற்கும் அவமானத்திற்கும் உட்படுவது அவர்கள்தான். அடிக்க கையோங்கும் மாணவனைக்கூட கண்டிக்கவோ தண்டிக்கவோ வழியில்லை இங்கே.

பொதுத்தேர்வுகளில் மாணவன் குறைவாக மதிப்பெண் வாங்கினால், ‘‘என்னத்த சொல்லிக் கொடுத்தீங்க?’’ என விரல் நீட்டி குற்றம்சாட்டும் பெற்றோர் ஒருபுறம்; ‘‘உங்களுக்கு எபிஷியன்ஸி இல்லை. இந்த வருஷம் இன்கிரிமென்ட் கட்’’ என முதுகில் குத்தும் நிர்வாகம் மறுபுறம் என இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு விழிக்கும் ஜீவராசிகள்தானே இந்த ஆசிரியர்கள்? கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை விட காசு தரும் பெற்றோருக்கே இங்கே மதிப்பும் மரியாதையும்.

ஏனோ அவளுக்கு வாய் விட்டு அழவேண்டும் போல தோன்றியது. கல்லூரியில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்த போது, ‘‘ஏம்மா, நீ ப்ளஸ் டூவில அருமையா மார்க் வாங்கியிருக்கே. நல்ல வேல்யூவான கோர்ஸில சேரலாமில்லை? பொறியியல் கல்லூரியில சேர்ந்து படிச்சு, உன் அண்ணா மாதிரி நீயும் எஞ்சினியர் ஆகலாமே? எதுக்கும்மா இந்த வேண்டாத வேலை?’’ என்று அப்பா சொன்ன போது எவ்வளவு கோபம் வந்தது அவளுக்கு?

‘‘ஏம்ப்பா நீங்களும், மத்தவங்க மாதிரியே பேசறீங்க? எல்லாருமே டாக்டர், இஞ்சினியர்னு படிச்சா, அப்புறம் தமிழை யார்தான் படிக்கிறது? நம்ம மொழியை படிக்கறதுக்கு நீங்களே முட்டுக்கட்டை போடலாமா? நான் முதுகலை தமிழ் படிச்சு, ஒரு ஆசிரியராகி அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்திட்டுப் போக விரும்பறேன். உங்களை மாதிரி பஞ்சாயத்து ஆபிஸ்ல பி.டி. ஓவாவோ, அண்ணன் மாதிரி எஞ்சினியர் ஆகிறதோ எனக்குத் துளி கூட விருப்பமில்லை’’ என்றாள் உறுதியுடன்.

தமிழாசிரியரான அவளுடைய தாத்தா, சிறுவயதில் இருந்தே ஊட்டி வளர்த்த தமிழ்ப்பற்று அவளுள் ஆழமாக வேர்பிடித்து விருட்சமாக வளர்ந்து நின்றது. ‘தாத்தாவைப் போல நானும் தமிழ் ஆசிரியராவேன்’ என தன் முடிவில் உறுதியாக நின்று, ஆசையாசையாக தமிழ் படித்து, கற்பிக்க வந்து முழுதாக இரண்டாண்டுகள் முடிவதற்குள் எத்தனை வித அனுபவங்கள்? ‘தாய்மொழியை சரியாக கற்பிக்க நான் எடுக்கும் முயற்சிகளுக்கு டார்ச்சர் எனப் பெயர் சூட்டுகிறாள் அந்தத் தாய்’. மனம் கசந்து போனது அவளுக்கு.

அடுத்து வந்த நாட்களில் வகுப்பில் மிகக் கவனமாக பிள்ளைகளை கையாண்டாள். லதாவைப் போல வேறு யாரேனும் பெற்றோர் வந்து முதல்வரிடம் புகார் செய்யுமாறு வைத்துக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்தாள். வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த பிள்ளைகளிடம் அன்பான கண்டிப்புடன் கூடிய அறிவுரையைத் தவிர்த்தாள். முன்பு போல மதிய உணவு இடைவேளையில் சீக்கிரமே அவர்களை உண்ணவைத்து முடிக்காத பாடங்களை எழுதி முடிக்கச் சொல்லாமல், மறு நாள் செய்து வரும்படி கூறினாள். வகுப்பில் வாசிக்க சொல்கையில் முக்கியமாக சிபியைத் தவிர்த்தாள். ஆனாலும் தண்ணீரை விட்டு விலகிய மீனாகத் துடித்தது உள்ளம். சிரிப்பும் விளையாட்டுமாக இருக்கும் அவளது வகுப்பறை ஜீவனின்றி இருந்தது.

நான்கு நாட்கள் கழித்து, ஒரு மாலை நேரம். ஒன்றிரண்டு பிள்ளைகளைத் தவிர வகுப்பறையே காலியாக இருந்தது. பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும் வரை வகுப்பாசிரியர் தான் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ஜன்னலருகே நின்றவாறு வெளியே காற்றிலாடும் வேப்பமரக் கிளையில் பார்வையை பதித்திருந்த ரம்யா, ‘மிஸ்’ என்ற குரல் கேட்டு திரும்பினாள். சிபி நின்றிருந்தான் தயக்கமாக. அவன் முகம் வாடியிருந்தது.

‘‘சொல்லு சிபி’’ ஒரு மென்
புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.
‘‘மிஸ், ஸாரி மிஸ்’’ என்றான் குரலில் வருத்தம் தேக்கி.
‘‘எதுக்கு ஸாரி?’’ என்றாள் புரியாமல்.
‘‘அன்னைக்கு என்னாலதானே உங்களை அம்மாவும், பிரின்சிபால் மேடமும் திட்டுனாங்க? என் மேல கோபம்தானே உங்களுக்கு?’’

‘‘ச்சே ச்சே, அதெல்லாம் இல்லையே’’
‘‘அப்ப ஏன் மிஸ் நீங்க இப்பல்லாம் என்னை கிளாஸ்ல வாசிக்க சொல்றதில்ல? அன்னிக்கு ஹோம் ஒர்க் செய்ய மறந்துட்டேன். ஆனா நீங்க ஒண்ணுமே சொல்லலையே? என்கிட்ட சரியாக் கூடப் பேச மாட்டேங்கிறீங்களே?’’ ஏக்கம் படர்ந்த விழிகளுடன் கேட்டவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திணறினாள்.
‘‘ஸ்கூல்ல நடக்கிற விஷயங்களை

அம்மாட்ட தினமும் சொல்லிடுவேன். அன்னைக்கு பரத்தும், ரியாசும் நான் தப்பா செய்யுள் வாசிச்சதை கிண்டல் பண்ணி சிரிச்சாங்களா? எனக்கு அழுகை வந்துடுச்சு. அதைப் பார்த்து அம்மாவுக்கு கோபம் வந்துடுச்சு. ஆனா மிஸ், நான் இப்ப நல்லா வாசிச்சு பழகிட்டேன் தெரியுமா? கேக்குறீங்களா?’’ என்றவன் தன் கையில் இருந்த தமிழ் புத்தகத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தான்.

‘‘அவையஞ்சி மெய் விதிர்ப்பார்
கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் நவையஞ்சி…’’
என்ற நீதி நெறிப் பாடலை திணறாமல், அழகாக வாசித்து முடித்தான்.
வியப்பில் புருவங்கள் உயர,
‘‘அருமைடா கண்ணா!’’

என்று அவன் தோள் தட்டி பாராட்டினாள்.

‘‘மிஸ், நீங்க சொல்லாட்டிக் கூட நான் தினமும் வீட்ல ரெண்டு, ரெண்டு தடவை குறள் எழுதிப் பார்க்கிறேன்’’ என்று தன் நோட்டைக் காட்டினான். ‘‘இப்ப நல்லா மனப்பாடம் ஆயிடுச்சு. நீங்க அடிக்கடி சொல்வீங்களே, எந்த மொழியையும் தப்பில்லாம பேச, எழுதக் கத்துக்கணும்னு. இப்பயே நான் சரியா வாசிச்சுப் பழகணும். இல்லைனா பெரியவன் ஆனதுக்கு அப்புறம் எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க. சரிதானே மிஸ்?’’ தெளிவாக அந்த சிறுவன் பேசியதைக் கேட்கையில் ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு.

‘‘அன்னைக்கு கோர்ட்ல ஜட்ஜ் அங்கிள் என் கிட்ட, ‘ உனக்கு அப்பா கிட்ட இருக்க விருப்பமா? இல்ல அம்மா கிட்ட இருக்கப் பிரியமான்னு’ கேட்டாரு. நான் அம்மாகிட்ட இருக்கணும்னு சொன்னேன். அதுக்கு அவர் காரணம் கேட்டாரு. அப்பா தினம் குடிச்சிட்டு வந்து அம்மா கிட்ட சண்டை போடுவாரு. அம்மா பாவம், தினம் அழுதுட்டே தூங்குவாங்க. ஆனா என்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்கன்னு சொன்னேன். அதனால அம்மா கூட இருக்கச் சொல்லி ஜட்ஜ் அங்கிள் சொல்லிட்டாரு.

‘‘அப்பாவை விட்டு பிரிஞ்சதுக்கப்புறம் அம்மா என்னை விளையாட்டுக்கு கூட திட்டறதே இல்லை. புது செல்போனை கீழே போட்டு டிஸ்ப்ளேயை உடைச்சேன். அப்ப கூட ஒண்ணும் சொல்லலை. மார்க் கம்மியா வாங்கினாலும், ஹோம் ஒர்க் பண்ணாம டி.வி பார்த்திட்டு இருந்தாலும் திட்டறது இல்லை. ஆனா என்னை ஸ்கூல்ல நீங்களாவது கரெக்ட் பண்ணுங்க மிஸ். இனிமே அம்மா கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் மிஸ். நீங்க எப்பவும் போல என்கிட்ட பேசுங்க.

எனக்கு உங்கள ரொம்பப் பிடிக்கும். என்னைக் கிளாஸ்ல வாசிக்க சொல்லுங்க. ப்ளீஸ் மிஸ்’’ அவன் பேசப் பேச, அடித்துப் பெய்த அடைமழையில் கரைந்து காணாமல் போகும் தார்ச்சாலைகளின் அழுக்கு போல, மனதின் மூலை முடுக்குகளில் தேங்கியிருந்த ஆதங்கம் அனைத்தும் மறைந்து, புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது அவளுக்கு.
‘‘தேங்க்ஸ்டா ராஜா! நீயாவது என்னை சரியாப் புரிஞ்சிக்கிட்டியே, அது போதும்டா கண்ணா’’ அவனது தலைமுடியை கலைத்து, கன்னம் வருடிய போது, ஏதோ சாதித்து விட்ட உணர்வில் மனம் துள்ளியது.‘‘நானும் உங்க அக்கறையை புரிஞ்சுக்கிட்டேன் கொஞ்சம் லேட்டா. ஸாரி மிஸ்’’ என வாயில்புறமிருந்து குரல் கேட்டது. அவள் திரும்பிப் பார்க்க, அங்கே கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தாள் சிபியின் தாய்.

தொகுப்பு: விஜி ரவி

The post சிறுகதை-அக்கறை appeared first on Dinakaran.

Tags : Ramya ,Kamala ,Dinakaran ,
× RELATED சென்னையில் அடுக்குமாடி...