×

‘கலைகள் நாம்’… வர்ணங்களின் விருட்சம்!

நன்றி குங்குமம் தோழி

தன் லட்சியத்திற்காக ஏற்கனவே செய்து வந்த வேலையை துறந்துவிட்டு நிரந்தர வருமானம் இல்லாத ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அந்த வேலை எதிர்காலத்தில் நன்மையை வழங்குமா என்று தெரியாது, எடுத்த முடிவு தவறானதா என்று இப்படி எந்த கேள்விகளுக்குமே பதில் இல்லாமல் கனவை மட்டுமே எதிர்நோக்கி செல்லும் மனிதர்கள் ஒரு சிலரே. அந்த சிலரில் ஒருவர் தான் சென்னையை சேர்ந்த எமிமால். கனவுகளை ேநாக்கி ஒரு ஆண் பயணம் செய்தாலே அவன் பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டும். ஆனால் அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்… அவர் ஆண்களை விட இரண்டு மடங்கு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ‘நீ பெண், இதை செய்யக் கூடாது, இப்படி பண்ணக் கூடாது’ என சொல்பவர்கள்தான் அதிகம்.

அப்படிப்பட்ட இடத்திலிருந்து தன் ஓவிய கலைக்காக பார்த்து வந்த ஐ.டி வேலையினை விட்டு, தன்னை போல் ஓவியத்தின் மேல் ஆர்வமும், ஆசையும் கொண்ட பல்வேறு துறையை சார்ந்த பல இளம் கலைஞர்களை ஒன்றிணைத்து ‘கலைகள் நாம்’ என்னும் ஒரு குழுவினை உருவாக்கி சென்னை, கோயம்புத்தூர் என பல மாவட்டங்களில் ஓவியங்கள் மூலம் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார் எமிமால்.

‘‘ஓவியங்கள் எனக்கு மன நிம்மதியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்குறேன்’’ என பேச ஆரம்பித்த எமிமால். ஓவியத்தின் மேல் தனக்கிருந்த ஆர்வத்தினையும், ‘‘கலைகள் நாம்’’ ஓவியக் குழுவை எவ்வாறு துவங்கினார் என்பதனையும் விளக்குகிறார். ‘‘நான் எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரி முடித்தவுடன் மென்பொருள் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் எனக்கு சொந்தமாக ஒரு தொழில் துவங்கணும்னு விருப்பம். அதனால் பார்த்து வந்த வேலையை விட்டுட்டேன். எனக்கு ஓவியங்கள் வரைவது மிகவும் பிடித்தமான விஷயம். அதனால் நாம் ஏன் ஓவியம் வரைவதை ஒரு தொழிலா பண்ணக்கூடாது என நினைத்து 2022-ல் துவங்கியதுதான் ‘‘கலைகள் நாம்’’ குழு.

என்னதான் கனவாக இருந்தாலும், நல்ல சம்பளம் கொண்ட ஐ.டி வேலையை விட்டுட்டு, ஓவியம் வரையப் போறேன், என் கனவை தேடிப் போறேன்னு சொன்னா யார்தான் ஒத்துப்பாங்க…? எங்க வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தான். இப்படி ஊர் ஊரா போய் ஓவியம் வரையப் போறேன்னு சொல்ற, ஒரு பெண் ‘இப்படி போனால் அவளுடைய எதிர்காலம் என்னாகும். யார் உன்னை கல்யாணம் செய்துப்பாங்க’ என்றெல்லாம் சொன்னாங்க.

என் கனவு இதுதான் என தெரிந்த பிறகு, மற்றவர்கள் சொல்வது எல்லாம் எனக்கு பெரிதா தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எங்க வீட்டிலும் நான் பிடிவாதமாக இருந்ததால், என்னுடைய கனவினை அவர்களும் ஏற்றுக் கொண்டாங்க. இப்போ என் கனவிற்கு என் பெற்றோர் மட்டுமில்லை, என் கணவரும் முழு சப்போர்ட் செய்து வருகிறார்’’ எனப் புன்னகையுடன் பதிலளித்தார். ‘‘கலைகள் நாம் துவங்கும் போதே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கலைஞர்களுடன் தான் துவங்கினேன். எனக்கு கலை துறையை சார்ந்த நண்பர்கள் அதிகம். நான் இந்தக் குழுவினை ஆரம்பிப்பது தெரிந்து என்னுடன் அவர்களும் சேர்ந்து கொண்டாங்க. எங்க குழுவில் குறிப்பிட்டு இவ்வளவு பேர் இருக்காங்கன்னு சொல்ல முடியாது.

இதில் முழு நேரம் வரைபவர்களும் இருக்காங்க, பகுதி நேரமா ஓவியம் வரைபவர்களும் இருக்காங்க. ஒரு 10 பேர் மட்டும் எப்போதுமே இருப்பாங்க. மற்றவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதும், அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் போதும் எங்களோடு கலந்துப்பாங்க. அது எங்களுக்கு மகிழ்ச்சி தான்’’ என்ற எமி, தங்கள் குழு செய்த முதல் பெயின்டிங் பற்றி விவரிக்கிறார்.  ‘‘எங்களோட முதல் பெயின்டிங்கை முகப்பேரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் செய்தோம்.

அதை எங்களுக்கு கிடைச்ச அரிய பொக்கிஷமாகத்தான் நாங்க நினைக்கிறோம். அந்த அரசுப் பள்ளியில்தான் எங்களுடைய முழுத் திறமையை வெளிக் கொண்டு வந்தோம் என்று சொல்ல வேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம எங்களுடைய கலைக்காக பண்ண ஓவியங்கள். எங்களின் முதல் பிராஜக்ட் தாம்பரத்தில் கிடைச்சாலும், அரசு சார்ந்த பிராஜக்ட் முகப்பேர் அரசுப் பள்ளிதான் என்பதால், எங்களுக்கு ரொம்பவே நெருக்கமான பிராஜக்ட்னுதான் சொல்லணும். அதனாலேயே எங்கு கேட்டாலும் எங்களின் முதல் பிராஜக்ட் முகப்பேர் அரசுப் பள்ளின்னுதான் சொல்லுவோம். எங்களுடைய அலுவலகம் சென்னையில்தான் என்றாலும், மற்ற மாவட்டங்களிலும் பிராஜக்ட்டிற்கு ஏற்ப நாங்க பயணிப்போம். அப்படித்தான் கோவை, காந்திபுரத்தில் உள்ள மேம்பாலத்தின் தூண்களை ஓவியம் மூலம் அலங்கரிக்கும் வாய்ப்புகள் கிடைச்சது.

அங்கு எங்களுடைய குழு மட்டுமல்லாது, வேறு ஒரு குழுவும் எங்களுடன் இணைந்து செயல்பட்டாங்க. சென்னையில் சில பொது இடங்களிலும் இது போல் ஓவியம் வரையும் வாய்ப்புகளும் கிடைச்சது. சென்னை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், பொது இடங்கள் என வரைந்தது என்றில்லாமல், ஒரு சில சினிமா படங்களுக்கும் நாங்கள் ஓவியங்கள் வரைந்திருக்கோம்.

முதன் முதலில் எங்களுடைய ‘‘கலைகள் நாம்’’ துவங்கியது ஒரு பள்ளியின் மூலம்தான் என்பதாலேயே பள்ளிகளில் ஓவியம் வரைவது எங்களுக்கு பிடித்த ஒன்று. முகப்பேர் பள்ளியில் எங்களின் ஓவியத்தைப் பார்த்த சில பள்ளிகளில் ஆசிரியர்களே நேரடியாக எங்களிடம் அவங்க பள்ளியில் பெயின்ட் பண்ண சொல்லி கேட்டுகிட்டாங்க. நாங்க எந்த பள்ளிக்கு போனாலும் முதலில் என்ன ஓவியங்களை வரையப் போகிறோம்னு அங்குள்ள தலைமை ஆசிரியரிடம் விவரிப்போம். அதில் அவர்கள் சில மாற்றங்களை சொல்வார்கள்.

அதற்கு ஏற்ப நாங்க வரைந்து கொடுப்போம். இதுவரை பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை எங்களின் ஓவியங்கள் அலங்கரித்துள்ளது. பள்ளியில் வரையும் போது ஒரு கதையாகட்டும், ஒரு பாடமாகட்டும் அதை எப்படியெல்லாம் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்ல முடியும் என்பதனை எங்களின் ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவோம். உதாரணத்துக்கு, பள்ளிகளில் குழந்தைகளின் படிக்கும் வகுப்பிற்கேற்ப அவர்களின் வகுப்பறையில் வரையும் ஓவியங்கள் மாறுபடும். எல்.கேஜி வகுப்பில் காடுகள், அதில் வன விலங்குகள் இருப்பது போலவும், சில கார்ட்டூன்களும் வரைவோம். படிகளில் ஒவ்வொரு படியிலும், எண்கள் வார்த்தைகளிலும், மறுபுறம் தமிழ் எழுத்துக்களும் இருக்கும்.

இந்த வண்ணங்களை பார்க்கும் போது பள்ளியில் அவர்களுக்கு நேர்மறையான உணர்வும், பாடமும் எளிதில் மனதில் பதியும் வகையில் இருக்கும். ஓவியங்கள் வரைவது மட்டும் எங்களது வேலை கிடையாது. அதற்கான பயிற்சி வகுப்புகளும் எடுக்குறோம். மற்றவர்கள் வெறும் ஒரு நாளில் நீங்களும் ஓவியர்கள் ஆகலாம், அதற்கான பயிற்சி என சொல்லி வர்க்‌ஷாப் நடத்தி வராங்க. ஓவியம் என்பதும் ஒரு கலை. அதனை ஒரு நாளில் கற்றுக் கொள்ள முடியாது.

அதனால் அதற்கு முறையான பயிற்சியினை அளித்து வருகிறோம். பள்ளிக் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் எங்களிடம் ஓவியம் வரைய கற்றுக் கொள்ளலாம். நாங்க ஆரம்பித்த போது எங்க குழுவில் இணைந்த கலைஞர்களை விட தற்போது அதிக அளவில் கலைஞர்கள் எங்களின் வேலையினை பார்த்து இணைந்துள்ளனர். அதில் ஒரு சிலர் ஓவியம் வரைவதையே தங்களின் முழு நேர ெதாழிலாக மாற்றியுள்ளனர். சிலர் பொழுது போக்கிற்காகவும் வரைகிறார்கள்.

இவர்களில் அனைவரும் இறுதிவரை எங்களுடன் பயணிப்பார்களா என்று எனக்கு தெரியாது. அதனால் முதல் மூன்று அல்லது நான்கு பிராஜக்ட்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அதில் அவர்களுக்கு ஓவியம் பற்றி நல்ல புரிதலும் ஆர்வமும், எங்கள் குழுவுடன் நல்ல ஒற்றுதலும் இருந்தால் எங்களுடன் தங்களின் பயணத்தை தொடர்வாங்க. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பலர் அவர்களின் மன நிம்மதிக்காகவே எங்களுடன் ஓவியம் வரைய வராங்க. சென்னை மட்டுமில்லை நாங்க செல்லும் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களை நம்பி அவ்வளவு தூரம் அவர்கள் வர ஒரே காரணம் ஓவியத்தின் மேல் அவர்கள் கொண்ட ஈடுபாடு என்றுதான் நான் சொல்வேன்’’ என்றவரிடம் ‘கலைகள் நாம்’ கலைஞர்களுக்கு மக்களோட ஆதரவு குறித்து கேட்டதற்கு…

‘‘கலைகள் நாம், ஆரம்பிக்கும் போது எங்களுக்கு என்று ஒரு குழு அமையும். அதற்கு மக்கள் ஆதரவு தருவாங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்த்தது இல்லை. ஓவியங்கள் கண்காட்சியில்தான் இடம் பெறுவது வழக்கம். அதைப் பார்க்க வருபவர்களும் சில நாட்களில் அதை மறந்திடுவாங்க. ஆனால் கலைகள் நாம் மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடக்கும் மேம்பால தூண், பொது இடங்களில் பார்க்கலாம். குறிப்பாக நம் கலாச்சாரம், பாரம்பரியம், நம் தமிழ் மற்றும் தமிழரோட பெருமைகளை உணர்த்தும் ஓவியங்களை தினமும் பார்க்கும் போது, அவை அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கும்.

இது எங்களுக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரம் என்று தான் சொல்லணும். மக்கள் எங்களுக்கு கொடுக்கும் அன்பும் ஆதரவும் தான் எங்களை மேலும் மேலும் நிறைய ஓவியங்களை வரைய தூண்டி வருகிறது. குறிப்பாக கோவை, காந்திபுரம் மேம்பால தூணில் நாங்க வரைந்த ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. நாங்க வரையும் போது அந்த பக்கம் வந்த வயதானவர்கள் எங்களை பார்த்து, ‘எப்படி இவ்வளவு உயரத்தில் ஏறி வரையறீங்க, பயமா இல்லையா, பார்த்து செய்யுங்க’ என எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தாங்க.

குழந்தைகளும் ஓவியங்கள் பிடிச்சிருப்பதாக வந்து சொல்வாங்க. இந்த ஆதரவு எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம். 2023-ல் ஊட்டியில் நடந்த உலக சாதனை போட்டியில் எங்க குழு பங்கேற்க வாய்ப்பு கிடைச்சது. 170 பேர் கொண்ட கலைஞர்கள் குழு 2 மணி நேரத்தில் 170 வண்ண ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்தது. அதில் எங்க குழுவும் பங்காற்றியது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எல்லா மக்களுக்குள்ளும் கலை என்ற விஷயம் புதைந்து இருக்கும். அதை அவர்கள் தங்களுக்கு பிடித்தமான ஓவியம், இசை, நடனம் போன்ற மீடியம் மூலமாக வெளிப்படுத்துவாங்க. ஆனால் கலை என்பது பொதுவான ஒன்றுதான். அதைத்தான் எங்களின் ‘‘கலைகள் நாம்’’ குழு மூலமாக வெளிப்படுத்தி வருகிறோம்’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார் எமிமால்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ‘கலைகள் நாம்’… வர்ணங்களின் விருட்சம்! appeared first on Dinakaran.

Tags : Kungumum Doshi ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்