×

இரட்சிப்பு என்ற நீச்சல் சாஸ்திரம்

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘நாக்கு உணவை சுவைத்து அறிவதுபோல, காது சொற்களைப் பகுத்துணர்கின்றது. நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம். நல்லது எதுவோ அதை நமக்குள்ளேயே முடிவு செய்வோம். ஆனால் யோபு சொல்லியுள்ளார். நான் நேர்மையானவன், ஆனால், இறைவன் என் உரிமையைப் பறித்துக்கொண்டார். நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார். நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று.

யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்? நீர் குடிப்பதுபோல் அவர் இறைவனை இகழ்கின்றார். தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார். கொடியவருடன் கூடிப் பழகுகின்றார். ஏனெனில் அவர் சொல்லியுள்ளார்; கடவுளுக்கு இனியவராய் நடப்பதனால் எந்த மனிதருக்கும் எப்பயனும் இல்லை. ஆகையால், அறிந்துணரும் உள்ளம் உடையவருக்கே செவி கொடுங்கள்! தீங்கிழைப்பது இறைவனுக்கும், தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும் தொலைவாய் இருப்பதாக! ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப அவர் கைம்மாறு செய்கின்றார்.

அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார். உண்மையாகவே கொடுமையை இறைவன் செய்ய மாட்டார். நீதியை எல்லாம் வல்லவர் புரட்ட மாட்டார். பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்? உலகத்தையும் அவர் பொறுப்பில் விட்டவர் யார்? உலகனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தவர் யார்? அவர் தம் ஆவியைத் தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால், தம் உயிர்மூச்சை மீண்டும் பெற்றுக்கொள்வதாக இருந்தால் ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும். மனிதர் மீண்டும் மண்ணுக்கே திரும்புவர். உமக்கு அறிவிருந்தால் இதைக்கேளும். என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.’’ (யோபு 24: 316)

தத்துவஞானி ஒருவர் ஆற்றைக் கடப்பதற்காக ஒரு படகில் ஏறி அமர்ந்தார். படகு புறப்பட்டதும் படகோட்டியைப் பார்த்து ‘உனக்கு வானசாஸ்திரம் தெரியுமா?’ என்று கேட்டார். அதற்குப் படகோட்டி, ‘ஐயா, நான் படிப்பறிவில்லாதவன், எனக்கு வானசாஸ்திரம் தெரியாது,’ என்றான். ‘ஐயோ, அப்படியானால் உனது வாழ்க்கையில் கால் பங்கு வீணாகிவிட்டதே’ என்று அங்கலாய்த்தார் ஞானி. படகு கொஞ்ச தூரம் சென்றதும், படகோட்டியிடம், ‘சரி, உனக்கு வானசாஸ்திரம் தெரியவில்லை. கணித சாஸ்திரமாவது தெரியுமா?’ என்றார்.

‘ஐயா, நான் மழைக்குக்கூடப் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியது இல்லை. எப்படி கணித சாஸ்திரம் தெரியும்?’ என்றான். ‘அப்படியானால் உமது பாதி வாழ்க்கை வீணாகி விட்டதே’ என்றார் ஞானி. இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே படகு ஒரு சுழற்சியில் சிக்கிக் கவிழ்ந்தது. படித்த மேதையான தத்துவ ஞானி தண்ணீருக்குள்ளிருந்து உயிருக்காகத் தத்தளித்தார். அப்பொழுது படகோட்டி அவரைப்பார்த்து, ‘ஐயா! நீச்சல் சாஸ்திரம் உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘தெரியாது’ என்று பரிதாபமாகத் தத்துவ ஞானி பதில் கூறினார். அப்பொழுது படகோட்டி, ‘ஆயிரம் சாஸ்திரங்களை நீங்கள் படித்திருந்தாலும், நீச்சல் சாஸ்திரமாகிய இரட்சிப்பு உங்களுக்குத் தெரியவில்லை என்றால் உங்களுடைய முழு வாழ்க்கையும் வீணாய்ப் போச்சுதே’ என்று அவருக்காகப் பரிதாபப்பட்டான்.

– ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

The post இரட்சிப்பு என்ற நீச்சல் சாஸ்திரம் appeared first on Dinakaran.

Tags : Christianity ,Job ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...