மாலி : மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மாலி நாட்டில் உள்ள கங்காபா மாவட்டத்தில் ஏராளமான சட்ட விரோத தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அங்குள்ள சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. 250 பேர் அங்கு பணியாற்றிய நிலையில், 150 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும் 70 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.இதனிடையே 4 நாட்களுக்குப் பின் அந்நாட்டின் சுரங்கத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ‘சுரங்கம் இடித்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் பணியாற்றியதாலேயே உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
The post தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 73 பேர் உயிரிழப்பு.. மாலி நாட்டில் சோக சம்பவம் appeared first on Dinakaran.