×

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வசதி இல்லை என்று சொல்வது தவறு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வசதி இல்லை என்று சொல்வது தவறு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தைப்பூசத்தை முன்னிட்டு, அருள்மிகு இன்று (25.01.2024) சென்னை, கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக அரசு அமைந்த பிறகு திருக்கோயில்களுக்கு வருகை தருகின்ற ஆன்மிக பெரியோர்களுக்கும். இறை அன்பர்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, திருவிழா காலங்களில் பக்தர்கள் மனதார இறை தரிசனம் செய்வதற்கு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு, அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருகின்ற அரசாக இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு அரசு திகழ்கின்றது. தைப்பூச தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகபெருமான் திருக்கோயில்களில் வழிபட்டு வருகின்றார்கள்.

ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்படுகிறது, சென்னை கந்தகோட்டத்தில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்துள்ளோம். அண்மையில் பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் மயூர வாகன சேவகத்தின் 100 வது ஆண்டு விழாவிலும், தைகிருத்திகையை முன்னிட்டு திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 20 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில் 11 திருக்கோயில்களில் முழு நேர அன்னதானத் திட்டமும், 756 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதான திட்டமும் செயல்படுத்தபட்டு, நாளொன்றுக்கு 92 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதற்கான ஆண்டு ஒன்றிற்கு 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு 20 நாட்கள் 10,000 நபர்கள் வீதம் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும், வடலூர் வள்ளலார் தெய் நிலையத்தில் நாளொன்றுக்கு 10,000 சன்மார்க்க அன்பர்கள் என 3 நாட்களுக்கு 30,000 சன்மார்க்க அன்பர்களுக்கும், திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயிலில் திருவிழா காலங்களில் 500 நபர்களுக்கும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமை தோறும் 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

முருகபெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ரூ. 599.50 கோடி மதிப்பீட்டில் 238 பணிகளும், அறுபடை வீடுகள் அல்லாத முருகன் திருக்கோயில்களில் ரூ.131.97 கோடி மதிப்பீட்டில் 173 பணிகளும் ஆக மொத்தம் முருகன் திருக்கோயில்களில் மட்டும் ரூ.731.47 கோடி மதிப்பீட்டில் 411 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளின் மூலம் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ரூ.140 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் திருக்கரங்களில் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இப்படி இந்த ஆட்சியானது ஆன்மிக பெரியோர்கள், இறையன்பர்களை தேவைகளை அறிந்து அனைத்து வகையிலும் நிறைவேற்றுகின்ற அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அதிகப்படியான திருக்கோயில் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் இருக்கின்ற சிலைகள் 38-க்கும் மேற்பட்ட சிலைகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த சிலைகளை மீட்டு வருகின்ற பணிகளை சிலை கடத்தல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசை பொறுத்தளவில் திருக்கோயிலில் இருக்கின்ற சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி, சுமார் 1200 திருமேனி பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. சிலைகள் திருடு போன பிறகு கண்டுபிடிப்பது ஒரு புறம் என்றாலும், இருக்கின்ற சிலைகள் எதுவும் களவு போகாமல் தடுப்பதற்கு உண்டான பணிகளையும் இந்த ஆட்சி மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் திருடப்பட்ட சிலைகள் மீட்பதில் தனி கவனம் செலுத்தி கடந்த காலங்களை விட அதிக எண்ணிக்கையில் சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியானது புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடலாம். ஆனால் முன்வைப்புத் தொகைக்கு போராட வேண்டிய நிலை தான் தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஜெட் வேகத்தில் துவக்கி விட்டார். களத்திலே கண்ணுக்கட்டிய தூரம் வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணிக்கு எதிரிகளை தென்படவில்லை. இந்த தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மிகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கூட்டணியே வெல்லும்.

மத்தியிலே தமிழ்நாடு முதலமைச்சர் கைகாட்டுகின்ற நபர்தான் பிரதமராக வரக்கூடிய சூழ்நிலை அமையும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆயிரம் பேருந்துகள் நிறுத்துகின்ற வசதியும், 100 பேருந்துகள் வந்து செல்லுகின்ற வசதி இருக்கின்றது. இந்தப் பேருந்து முனையத்தை திறப்பதற்கு முன்பாகவே நானும், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளரும், போக்குவரத்து துறை செயலாளரும், போக்குவரத்து துறை ஆணையரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டத்தை மூன்று முறை நடத்தினோம். அதில் முதலமைச்சர் இந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தபின், படிப்படியாக இங்கிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று உறுதி அளித்தார்கள்.

அந்த வகையில் டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது 5 தினங்கள் 60 பேருந்துகளை இயக்கினார்கள். அதன் பிறகு பொங்கல் திருநாள் வருவதால் அது முடிந்தவுடன் நாங்கள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். இறுதியாக போக்குவரத்து துறையின் ஆணையாளர் அவர்கள் ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க வேண்டும் என்று அறிவித்து நோட்டீசும் வழங்கி இருந்தார். ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, நாங்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க மாட்டோம் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்குவோம் என்றால் இதில் யார் மீது குற்றம்.

தமிழ்நாடு அரசை பொறுத்தளவில் தெளிவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இருக்கின்றோம். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வசதி இல்லை என்று சொல்வது தவறு. ஒரே நேரத்தில் சுமார் 77 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு 5 நடை மேடைகள் இருக்கின்றன. அதோடு இல்லாமல் பணிகள் இல்லாத நிலையில் 170 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்க பேருந்து நிறுத்தம் (ஐடியல் பார்க்கிங்) அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே போதுமான வசதி இருக்கின்றது. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஆகவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, மக்களுக்கு தெளிவுபடுத்தி முன்பதிவை நீங்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தான் எடுத்திருக்க வேண்டும்.

அதை விட்டு முரண்பாடாக மீண்டும் நீங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே முன்பதிவு எடுப்பதால் தான் இந்த குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். நேற்றைய தினம் முதல் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டது. ஆகவே ஆம்னி போக்குவரத்து உரிமையாளர்கள் மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் முன்கூட்டியே தகவலை தெரிவித்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவர்கள் பயணம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்திடவேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் போக்குவரத்துத்துறையும் தயாராக இருக்கின்றது.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நானும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் அனைத்து நிலையிலும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே இப்பிரச்சனையை இன்றோடு முடிவுக்கு கொண்டு வந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு போதிய தகவல்களை தெரிவித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களை கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன் ஜ. முல்லை திருக்கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வசதி இல்லை என்று சொல்வது தவறு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Glampakkam bus terminal ,Minister ,Sekarbabu ,Chennai ,Klampakkam bus terminal ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Honourable Minister of Hindu Religious Affairs ,P. K. Arulmigu ,Chennai, Gandakotam ,Sekarbhabu ,Thaipusath ,Sekharbhabu ,Dinakaran ,
× RELATED குத்தம்பாக்கம் புதிய பேருந்து...