×

பழநியாண்டவரும்.. திருநீறும்…

திருநீறு சிவச்சின்னங்களுள், அடையாளங்களுள் ஒன்றாகும். சிவனை சுடலைப்பொடி பூசிய இறைவனாக போற்றுவது சைவ மரபு. இதில் நிலையாமை தத்துவம் உட்கிடையாக பொதிந்துள்ளது. திருநீறு நிலையாமையை உணர்த்தி, நிலையானவற்றை செய்வதற்கு மனிதனை ஊக்கப்படுத்துவதாகவும், நல்வழிப்படுத்துவததாகவும் தத்துவ கூற்றாக பொருள்படுத்தி கூறப்படுகிறது. திருநீற்றை வெண்ணீறு என்றும், திருவெண்ணீறு என்றும் கூறுவர்.

திருமுருகனை சிவபெருமானின் மறுவடிவம் என்பர். எனவே, சிவ சின்னமாகிய திருநீறு முருகனுக்கும் உரித்தாயிற்று. திருமுருகன் வழிபாட்டிலும், திருக்கோயில்களிலும் இப்படித்தான் திருநீறு இடம் பெற்றது. பழநி கோயிலில் பழநியாண்டவருக்கு திருநீறு தனிச்சிறப்பினதாக விளங்குகிறது. திருவருளை வாழ்க்கையில் பற்றுக்கோடாகவும், ஊன்றுகோலாகவும் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும். அப்போது திருவருட் துணையால் வாழ்க்கை நலம் பெறுகிறது, பயன்தருகிறது என்பதே இதன் பொருளாகும். திருநீறுக்கு தமிழில் வெண்ணீறு எனவும், வடமொழியில் விபூதி, பஸ்பம் என்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றன.

திருநீறு தரிப்பதால் தலையில் உள்ள துர்நீரை எடுத்து, கபாலத்தை தூய்மை செய்தவாலும் திருநீறு என்று பெயர் பெற்றதாக மருத்துவ உலகம் கருதுகின்றது. சாணமும், கோமயமும் கிரிமிநாசினிகள் எனும் கிருமிக்கொல்லிகள் ஆகும். இதன் காரணமாகவே பசுஞ்சாணத்தில் திருநீறு தயாரித்தல் நடைபெறுகிறது. இது மண் மருத்துவம் போன்று தான மருத்து முறையாகும். முற்காலங்களில் பசுஞ்சாணத்தை உருட்டி, எருவாட்டியாக்கி, எரியூட்டி சாம்பலாக்கி அதனை தரித்து வந்தனர். இந்த முறையில் கிடைக்க பெற்ற சாம்பலை வெண்மையாகவும், மென்மையாகவும் மாற்றி பயன்படுத்தி வந்துள்ளனர்.

இத்திருநீறில் மணம் தரும் மலர்கள், இதழ்கள், வேர்கள், கேடு செய்யாத தைலங்கள் சேர்க்கப்படுகின்றன. திருநீற்றின் சிறப்புகளை சைவநூல்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் திருமூலரின் திருமந்திரம், திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம், சேக்கிழாரின் பெரிய புராணம் ஆகியவற்றில் திருநீற்றின் சிறப்புகள், அதனை தரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

நாட்டுப்புற கலைகளின் காப்பகம் பழநி முருகன் கோயில்
என்.ஹரிஹரமுத்து, மாநில தலைவர், தமிழ்நாடு பிராமணர் ஷமாஜம்
நாட்டுப்புற ஆட்டங்கள் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்டவையாகும். கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டவையே நாட்டுப்புற ஆட்டங்கள். கிராம மக்களின் வாழ்க்கை பின்புலத்தில் இருந்து தோன்றியவையாக இவ்வகையான ஆட்டங்கள் திகழ்கின்றன. கோயில்களில் தான் நாட்டுப்புற கலைகளான ஆட்டக்கலை, இசை கலை சிறப்பிடம் பெற்று வந்து இருக்கின்றன. பழநி முருகன் கோவில் வழிபாட்டில் தைப்பூசத்திலும், பங்குனி உத்திர திருவிழாவிலும் காவடி ஆட்டக்கலை. கரகாட்ட கலை போன்ற ஆட்டக்கலைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

திருவிழா காலங்களில் களஆய்வில் சேகரித்த போது கீழ்க்கண்ட நாட்டுப்புற ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. காவடி ஆட்டம், சாமி ஆட்டம், வேலனாட்டம், கும்மி ஆட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், குடை ஆட்டம், சக்கை ஆட்டம், தப்பு- திடும் ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம், கோமாளி ஆட்டம், சுருள் சுத்தி ஆட்டம் என்பனவாகும். குடை ஆட்டமும், கோலாட்டமும் தைப்பூச விழாவில் காணப்படுகின்றன. தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாவில் காவடி ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் முதலியன இடம் பெறுகின்றன. சாமி ஆட்டம், சக்கை ஆட்டம், வேலனாட்டம் போன்றவை அக்கினி நட்சத்திர விழா, தைப்பூச விழாவில் இடம் பெற்று வருகின்றன.

காவடி என்ற சொல்லை காவு+தடி என பிரித்து நோக்கலாம். கட்டி தொங்கவிட்டு சுமத்தல் என்ற பொருளினை காவு என்ற பதம் கட்டி நிற்கின்றது. இருமுனைகளிலும் பளுக்களை கட்டி தோளில் தூக்கி செல்லப்படும் கோல் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றன. முருக பெருமானை வழிபட வருகின்ற பக்தர்கள் ஆடும் ஆட்டம் காவடி ஆட்டமாகும். பங்குனி உத்திர திருழாவில் காவடி ஆட்டம் சிறப்பிடம் பெற்று திகழ்கின்றன. தெய்வீக கலையாக முருகன் கோயில் காவடி ஆட்டக்கலை நடைபெற்று வருகின்றது. பழநி முருகன் கோயிலில் நடைபெறுகின்ற காவடி ஆட்டத்தில் பின்னணி இசை இடம் பெறுகின்றது. காவடி ஆட்டத்திற்கு பின்னணியாக நாட்டுப்புற இசை கருவிகள் அமைகின்றன. காவடி கூட்டத்தினர் தப்பு, திடும், நகார், மேளம், நாதசுரம் இசைக்க ஆடுகின்றனர். காவடி சுமந்து வருவோர் வேகமாக இசைக்க வேகமாக ஆடுகின்றனர். கழுத்திலும், தலையிலும் காவடியை வைத்து சுழற்றி சுழற்றி ஆடுகின்றனர். இசை கருவிகள் முழக்கத்திற்கு ஏற்ப காவடி அதிவிரைவாக ஆடுகின்றனர்.
காவடி ஆட்டக்கலை நாட்டுப்புற கலை வடிவம் கொண்டது. வாய் மொழியாகப் பாடப்பட்டு வந்த காவடி பாடலுக்கு ஆட்டக்கலையாக திகழ்ந்து வருகின்றது. காவடி சிந்து என்பது வேறு, காவடி ஆட்டப்பாடல்கள் என்பது வேறு. இலக்கண வரையறைக்குட்பட்டது காவடி சிந்து. காவடி சிந்து பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, மூன்று சரணங்கள் என்று ஐந்து உறுப்புகள் இடம் பெற்றிருக்கும். பழநி முருக வழிபாட்டில் காவடி ஆட்டத்திற்கு அடுத்து கரகாட்டம் சிறப்பிடம் பெற்று திகழ்கின்றது.

இறை பணியில் பூத்த காவடி ஆட்டக்கலை இன்று தொழிற்சாலையாக மாறிவிட்டது. நாட்டுப்புற ஆட்ட கலைகள் தொழில் முறை கலைஞர்களால் இன்று நாடக மேடையில் ஆடப்படுகின்றன. சடங்கு தன்மை நீங்கி சமய சார்பற்ற ஓர் ஆட்டக்கலையாக நாட்டுப்புற கலைகள் விளங்குகின்றன. இறைவழி பாட்டுக்காக ஆடுகின்ற நிலை மாறி வியாபார கலையாக பல்வேறு நாட்டுப்புற கலைகள் மாறிவிட்டன. காவடி ஆட்டத்திலும், கிராம கலை தன்மை குறைந்து நகரவாடை வீசுகிறது, முன்னோர்களின் பண்பாட்டு சின்னமாக திகழ்ந்த கிராமிய கலையான ஆட்டக்கலை இன்று அதன் தொன்மை தன்மை இழந்து வருகிறது. பழநி முருகன் கோயில் நாட்டுப்புற கலைகளின் காப்பகமாக திகழ்ந்து வருகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் பாதயாத்திரையாய் காவடி எடுத்து வரும் பக்தர்கள் ஆடியும், பாடியும் மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.

The post பழநியாண்டவரும்.. திருநீறும்… appeared first on Dinakaran.

Tags : Shiva ,
× RELATED ரிஷபத்தால் தோன்றிய ரிஷபபுரீஸ்வரர்